பதினெட்டு வருடங்களாகப் பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டிருந்த லண்டன் பொலீஸ்!

லண்டன் மாநகர பொலீஸ் துறையைச் சேர்ந்த ஒரு நபர் தான் இதுவரை 40 பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டிருக்கிறார். விபரமான வெளிப்படுத்தல்கள் மூலம் ஐக்கிய ராச்சியத்தின் சரித்திரத்திலேயே மோசமான ஒரு பாலியல் குற்றவாளியாகியிருக்கிறார் அந்த நபர். ஆகக்குறைந்தது 17 வருடங்களாகப் பாலியல் வன்முறைகளுட்பட்ட குற்றங்களை இழைத்து வருவதாக அந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

24 பாலியல் வன்புறவுகளில் ஈடுபட்டதுடன் 12 பெண்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த பொலீஸ் வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. மொத்தமாக 49 குற்றச்சாட்டுகள் அந்தப் பொலீஸ் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் அலுமாரிக்குள் அடைக்கப்பட்டு மணிக்கணக்காக அரைக்கச்சால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிலர்  துப்பாக்கி முனையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

டேவிட் கரெக் [David Carrick] என்ற அந்த பொலீஸ் உத்தியோகத்தர் 2001 ம் ஆண்டு முதல் லண்டன் பொலீஸ் துறையில் பதவியிலிருக்கிறார். அதற்கு முதல் இராணுவத்திலும், பாராளுமன்றப் பாதுகாப்புச் சேவையிலும் பணிபுரிந்திருக்கிறார். கரெக் மீது பாலியல் துன்புறுத்தல்கள், குடும்பத்தினுள்ளான வன்முறை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு சக உத்தியோகத்தினரின் கவனத்துக்கு உள்ளாகியிருந்தும் அவைகளைத் தொடர்ந்து ஆழமாக விசாரிக்க எவரும் முற்படவில்லை என்ற உண்மையும் தெரியவந்திருக்கிறது. தமது பொலீஸ் அமைப்புக்குள்ளேயே இப்படியான ஒரு குற்றவாளியை விசாரிக்க எவரும் முற்படாதது பற்றி லண்டன் பொலீஸ் துறையினர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.

பாலியல் வன்முறைகள் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும் கூட கரெக் பொலீஸ் உத்தியோகத்தில் படிப்படியாகப் பதவியுயர்வு பெற்று பாராளுமன்றத்தில் காவல் சேவை, பிரதம மந்திரியின் வீட்டுக்குப் பாதுகாப்பு ஆகிய பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார். தனது பதவியைப் பயன்படுத்திப் பெண்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற கரெக் அவர்களை மிரட்டிக் குற்றங்களை வெளியிடாமலும் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மான் கரெக்கின் குற்றங்கள் பற்றியும் அவை பொலீசாரின் விசாரணைக்கு இல்லாதது பற்றியும் குறிப்பிடும்போது “இந்த பயங்கரமான சம்பவம் சாதாரண மக்களின் நம்பிக்கையை மீறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது. இது காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும், இதன் மூலம் காவல்துறையில் தரம் மற்றும் கலாச்சாரம் மாற வேண்டும் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார்.

நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணைகள் சுமார் மூன்று வாரங்களில் நிறைவடைந்து கரெக் மீதான தண்டனை விபரங்கள் வெளியாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *