அழியும் ஆபத்திலிருக்கும் உயிரினங்கள், தாவரங்களைப் பாதுக்காக்க நாட்டின் 30 % பிராந்தியத்தை ஒதுக்கும் ஆஸ்ரேலியத் திட்டம்.
ஆஸ்ரேலியாவில் மட்டுமே வாழும் உயிரினங்கள், தாவரங்கள் மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டு வருவதைச் சமீபத்தில் ஆஸ்ரேலிய அரசால் வெளியிடப்பட்ட சுற்றுப்புற சூழல் பற்றிய ஆராய்ச்சி அறிக்கையொன்று சுட்டிக் காட்டியது. சூழலை மனிதர்கள் அசட்டைசெய்யும் நடவடிக்கைகளுக்கு அரசு எடுத்து வரும் பல முடிவுகளும் காரணம் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுச் சாடியிருந்தது. செவ்வாயன்று அந்த நிலைமையை மாற்றுவதற்கான குறிக்கோளுடன் தற்போதைய அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது.
சூழல் மேம்பாடு, நீர்வளத்துறைக்கான ஆஸ்ரேலியாவின் அமைச்சர் தன்யா பிளிபர்சேக் அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டத்திற்காக வரவிருக்கும் 10 வருடங்களுக்கு, சுமார் 145 டொலர்கள் செலவிடப்படும். நாட்டின் 30 % பிராந்தியத்தை அந்த நாட்டில் மட்டுமே காணப்படும் தாவரங்கள், உயிரினங்கள் தொந்தரவுகளின்றிப் பாதுகாப்பாக வாழுவதற்காக ஒதுக்கப்படும். 20 பிரத்தியேகப் பிராந்தியங்களும் அவ்விடங்களுடன் தொடர்புள்ள உயிரினங்கள் 110 க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அத்திட்டம் குறிப்பிடுகிறது.
சூழலின் நிலைமை இத்தனை மோசமாகியிருப்பதற்கு ஆஸ்ரேலியாவில் இதுவரை ஆட்சியிலிருந்த லிபரல் கட்சியினரைச் சாடிய அமைச்சர் பிளிபர்சேக், “நாம் இதுவரை எங்கள் சூழலைப் பேணும் பாங்கு சரியானதல்ல. தொடர்ந்தும் அதே வழியில் நடப்போமானால், விளைவுகள் அதே போலவே இருக்கும். நிலைமையை எதிர்கொண்டு அவைகளில் மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க நான் தயங்கப்போவதில்லை,” என்று சூழுரைத்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்