தனது கூட்டணி அரசின் ஒரு கட்சியின் ஆதரவை இழந்ததால் டென்மார்க் பிரதமர் பொதுத்தேர்தலை அறிவித்தார்.
டென்மார்க்கின் அரசு பாராளுமன்றத்தில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக் கூட்டணியின் ஆதரவுக் கட்சி ஒன்று தொடர்ந்தும் அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்ட இக்கட்டான நிலையில் பிரதமர் மெத்தெ பிரெடெரிக்சன் நாட்டில் பொதுத்தேர்தலை அறிவித்திருக்கிறார். 2019 இல் பிரதமராகப் பதவியேற்ற அவரது அரசு ஆளவேண்டிய காலத்திற்கு ஏழு மாதங்களுக்கு முன்னரே விலகிக்கொள்கிறது. நவம்பர் முதலாம் திகதி பொதுத்தேர்தல் நடந்து அரசு தெரிவுசெய்யப்படும் வரை தற்போதைய அரசே தற்காலிக அரசாகப் பதவியிலிருக்கும்.
கொவிட் 19 நாட்டில் பரவியபோது அங்கே தமது தோல்களுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க் எனப்படும் பெரிய எலிகள் போன்றவைகளில் அவ்வியாதி பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பரவலைத் தடுக்க நாட்டிலிருக்கும் மிங்க்களை மொத்தமாகக் கொன்று புதைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அவ்விலங்குகளைச் சரியான முறையில் புதைக்கப்படாததால் அவைகளின் நாற்றம் பலமாகப் பரவ, கிருமிகளும் பரவக்கூடும் என்ற நிலையில் அவற்றைத் தோண்டியெடுத்து மீண்டும் புதைக்கவேண்டியதாயிற்று. அந்த விலங்குகள் பற்றி அரசு எடுத்துச் செயற்படுத்திய முடிவுகளே பிரெடரிக்சன்னின் ஆதரவு இழப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
டென்மார்க் பாராளுமன்றத்தின் 179 அங்கத்துவர்களுக்கான தேர்தலில் மீண்டும் குடிவரவு, அகதிகள் பற்றிய விடயங்களே மீண்டும் அரசமைப்பது யார் என்பதை முடிவுசெய்யக்கூடும். அரசியலில் நடு நிலைப்பாடு, வலதுசாரித் தேசியவாதம் ஆகிய கோட்பாடுகளுடனிருக்கும் பிரெடெரிக்சன்னின் எதிர்க்கட்சிக் கூட்டணியினர் மிகக் குறைவான வித்தியாசத்திலேயே பின் தங்கியிருக்கிறார்கள்.
ரஷ்யா – உக்ரேன் போர் சர்வதேச ரீதியில் பெரும் இன்னலை உருவாக்கியிருக்கும் சமயத்தில் தேர்தலொன்றை நடத்த டென்மார்க்கின் கட்சிகள் எவருமே விரும்பவில்லை. அதேசமயம், பால்டிக் கடல் பிராந்தியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் போரால் ஏற்பட்டிருக்கும் பதட்ட நிலைமையில் அவசியமான முடிவுகளை எடுக்க ஒரு பலமான அரசாங்கம் வேண்டும் என்று சகலரும் கருதுகிறார்கள். அதனாலேயே, வழக்கத்துக்கு மாறாக ஆளும் தவணை நிறைவேற முதலேயே பிரதமர் பொதுத்தேர்தலை அறிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்