சுவிஸ் நாட்டில் சிறப்பாக நடந்தேறிய கலையமுதம் 2022
கடந்த வாரவிடுமுறை நாள்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரத்தில் மிகச்சிறப்புடன் கணா மாஸ்ரரின் கலையமுதம் 2022 நடந்தேறியது.
கடந்த ஐப்பசி (ஒக்டோபர்) மாதம் 2ம் 3ம் திகதிகளில் காலை வேளை முதல் இரவு வேளை வரை முற்றிலும் கலை நிகழ்வுகளின் சங்கமமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஐரோப்பியக் கலைஞர்களும் தமிழ்நாட்டிலிருந்து வந்த கலைஞர்களும் மாறி மாறி அரங்கை அதிர வைத்தபடி மக்களின் ரசனைக்கு விருந்தாக நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர்.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் வல்வை திரு. அனந்தராஜ், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் , உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.தர்மலிங்கம், மற்றும் தாயகத்திலும் சுவிஸ் நாட்டிலும் பிரபலமான ஆசிரியரும் ,தற்போது இயற்கை முறை பண்ணையாளராக, தாயகத்தில் தன் செயற்பாடுகளை முழு முயற்சியோடு செயற்படுத்தி வரும் திரு.உருத்திரமூர்த்தி ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் தாயகத்திலிருந்து வருகைதந்து நிகழ்ச்சியில் சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் எம் சமூகத்திற்கு அரும்பணி ஆற்றும் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அத்துடன் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க அவர்களுக்கான கௌரவ பட்டமளிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த ஆற்றலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை இந்த அரங்கின் மிக முக்கிய நிகழ்வாக தான் கருதுவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளரும் சுவிஸ் சூரிச்சில் பிரபல்யமான ஆசிரியருமான திரு கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் அரங்கில் தெரிவித்திருந்தார்.
ஒட்டுமொத்தமாக இரண்டு நாள்களும் முழுவதுமாக இயல் இசை நாட்டியம் என சிறப்பான கலைவிருந்தாக அமைந்த கலையமுதம் 2022 மக்களின் ரசனையை வென்ற நிகழ்ச்சியாக நிறைவுக்கு வந்தது.