82 வயதான பிரெஞ்ச் எழுத்தாளர் அன்னி எர்னோ இலக்கியத்துக்கான 2022 ஆண்டின் நோபல் பரிசைப் பெறுகிறார்.

சுவீடிஷ் இலக்கிய அமைப்பின் நிரந்தரக் காரியதரிசி ஒக்டோபர் மாதம் இலக்கியச் சேவையில்  இவ்வருடத்துக்கான நோபல் பரிசை அறிவித்தார். 1940 ம் ஆண்டு பிரான்சின் நோர்மண்டியில் பிறந்த அன்னி எர்னோவுக்கு [Annie Ernaux] அப்பரிசு கிடைக்கலாம் என்று பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டதால் அதனால் தாம் பெரும் ஆச்சரியமடையவில்லையென்று இலக்கிய ஆர்வலர்கள் பலர் தெரிவித்தார்கள்.

“அப்படியாகவா, உண்மையாகவே எனக்கு அப்பரிசு கிடைத்திருக்கிறதா? இந்தப் பரிசைப் பெறுவது எனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் கௌரவம். அதேசமயம் இலக்கியச் சேவையில் எனது தோள்களில் சுமக்கவேண்டிய பொறுப்பாகவும் நான் அதைக் கருதுகிறேன்,” என்று தனக்கான பரிசு அறிவிக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டவுடன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அன்னி எர்னோ. 

1974 இல் Les armoires vides [காலி அலுமாரிகள்] என்ற தனது முதலாவது புத்தகத்தை எர்னோ வெளியிட்டார். அவரது நான்காவது படைப்பான ”La Place” [அந்த இடம்]  தான் முதலாவதாகப் பிரபலம் அடைந்த படைப்பாகும். Les années என்ற 2008 ம் ஆண்டில் வெளியாகிய அவரது படைப்பு சர்வதேச ரீதியில் அவருக்குப் பெரும் பாராட்டுகளைக் குவித்தது. “என் தந்தை”, “அவமானம்”, “அந்தப் பெண்” ஆகியவையும் அவருடைய பாராட்டுக்குரிய படைப்புகளாகும். அவர் தனது படைப்புகளில் தனது வாழ்க்கையில் நடந்தவைகளை, ஒரு பார்வையாளராக ஒதுங்கி நின்று கவனித்தப் பாத்திரங்களில் வரைந்திருக்கிறார்.

இலக்கியச் சேவைக்கான நோபல் பரிசைப் பெறும் பதினேழாவது பெண்ணான அன்னி எர்னோ, பிரான்சில் அப்பரிசைப் பெறும் முதலாவது பெண்ணாகும். மேற்கு நாடுகளைச் சேர்ந்த வெள்ளை இன ஆண்களுக்கே பெரும்பாலும் இலக்கியத்துறைக்கான பரிசைக் கொடுத்து வருவதாக நோபல் அமைப்பு விமர்சிக்கப்படுகிறது. சமீப வருடங்களில் அந்த அவப்பெயரை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது நோபல் இலக்கிய அமைப்பு.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *