துருக்கியில் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்!
துருக்கியில் தலைமுடியை மறைக்கும் துண்டைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் அதைச் சகல இடங்களிலும் பாவிக்கும் உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். படிப்படியாக அவ்வுரிமையை அவர்கள் பெற்றாலும் அதைப் பற்றிய தெளிவான விபரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இன்னும் பொறிக்கப்படவில்லை. எனவே, அதுபற்றி விபரிக்கும் ஒரு மசோதாவை அடுத்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவிருப்பதாக நாட்டின் நீதியமைச்சர் பெக்கீர் பொஸ்டாக் தெரிவித்தார்.
“தற்போதைய நிலையில் பெண்கள் கல்லூரிகள், கல்விக்கூடங்கள், இராணுவம் மற்றும் பொலீஸ் ஆக இருப்பினும் தமக்கு விருப்பமிருந்தால் ஹிஜாப் அணிந்துகொள்ளலாம். ஆனால், அதைப்பற்றிய விபரங்கள் எங்கள் அரசியலமைப்புச் சட்டங்களில் இல்லை. எதிர்காலத்தில் அதைப் பாவித்து எவரும் நாட்டில் பிரச்சினைகளைக் கிளறிவிடாமலிருக்கவேண்டும். அதைத் தடுக்க பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையை வெளிப்படுத்தும் சட்டத்திருத்தங்களை முன்வையுங்கள்,” என்று இவ்வாரத்தில் நிகழ்ச்சியொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரிசப் எர்டகான் சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.
பொது அலுவலகங்களில் ஹிஜாப் அணிவதைத் தடுக்கும் சட்டம் 1980 களில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அது துருக்கிய இராணுவத்தின் கட்டாயத்தால் அன்றைய ஆளும் பழமைவாதக் கட்சியினரால் கொண்டுவரப்பட்டது. 1990, 2000 ஆண்டுகளில் ஹிஜாப் அணிதல் பற்றிய விவாதங்கள் துருக்கியெங்கும் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி எர்டகான் 2008 இல் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஹிஜாப் அணியலாம் என்ற சட்டத் திருத்தத்தைத் துருக்கியப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2013 இல் துருக்கியப் பொது அலுவலங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் ஹிஜாப் அணியும் உரிமை வழங்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்