அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பொருளாதாரக் கோட்பாடுகளுக்கான 2022 ம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றவர்களாக மூவரை அறிவித்திருக்கிறது சுவீடனின் மத்திய வங்கி. பொருளாதார வீழ்ச்சி, வங்கிகளுக்கும் அதற்குமுள்ள தொடர்பு ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மூன்று அமெரிக்கர்களுக்கு அப்பரிசு கொடுக்கப்படுகிறது. சுமார் ஒரு மில்லியன் எவ்ரோ பெறுமதியான பரிசுத்தொகையை பென் பெர்னாக்கே, டக்ளஸ் டயமண்ட், பிலிப் டீவிக் ஆகிய அம்மூவரும் பகிர்ந்துகொள்வார்கள்.  

பென் பெர்னாக்கே பொருளாதார உலகில் பெருமளவில் பிரபலமானவர். அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைமை நிர்வாகியாக 2006 – 2014 வரை கடமையாற்றியவர். தனக்கு முன்னால் அப்பொறுப்பிலிருந்தவர் செய்த தவறுகள் பலவற்றைச் சரி செய்தமைக்காக அவர் பாராட்டப்படுகிறார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள மத்திய வங்கிகள் தமது கடன்கொடுக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பொருளாதாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் பெர்னாக்கே.

டக்ளஸ் டயமண்ட் அமெரிக்க வர்த்தக அமைப்பின் தலைவராக இருந்தவர். பல்கலைக்கழகப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். தனது ஆராய்ச்சிகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்ற இவர் நோபல் பரிசு பெறக்கூடியவர் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர்.

பிலிப் டீவிக் யேல் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களின் வர்த்தக அமைப்பின் தலைவராக இருந்தவர்.

இவ்வருடப் பரிசைப் பெற்றவர்களின் ஆராய்ச்சிகள் மூலம் 2008 – 2009 ம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் பின்னடைவுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியுமென்று அவர்களுக்குப் பரிசு கொடுக்கப்படுவதன் காரணம் குறிப்பிடப்படுகிறது. 1930 ம் ஆண்டில் உலகத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் அதற்கான காரணங்களையும் ஆராய்ந்திருக்கிறார்கள் பரிசு பெற்ற மூவரும். சமீப காலத்தில் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவுகள் 1930 ஆண்டில் உண்டானதைப் போன்ற படு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அதற்கான காரணம் வங்கிகள் தமது நடவடிக்கைகள் மூலம் பொருளாதார வீழ்ச்சிகளின் தாக்கங்களைக் குறைக்கலாம் என்பதே இவர்களுடைய ஆராய்ச்சியின் விளக்கம்.

நோபலின் ஞாபகார்த்தமாகக் கொடுக்கப்படும் பரிசுகளில் பொருளாதாரத் துறைக்காகக் கொடுக்கப்படும் பரிசே இளமையானது. இது சுவீடனின் மத்திய வங்கி தனது 300 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது ஆரம்பிக்கப்பட்டது. உண்மையில் இது ஒரு நோபல் பரிசு இல்லையெனினும் நோபல் பரிசுகளைத் தெரிவுசெய்யும் சுவீடனின் தேசிய விஞ்ஞான பீடமே இதற்கான பரிசு பெறுகிறவர்களையும் தெரிந்தெடுக்கிறது.

 1968 லிருந்து கொடுக்கப்படும் இப்பரிசை 85 ஆண்களும் இரண்டே இரண்டு பெண்களுமே இதுவரை பெற்றிருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *