அமெரிக்கப் பாராளுமன்ற வன்முறை விசாரணைக்குழு டிரம்ப்பைச் சாட்சி சொல்ல அழைத்திருக்கிறது.
அமெரிக்கப் பாராளுமன்றம் ஜனவரி 06, 2021 இல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது பற்றிய விபரங்களை ஆராயும் குழு தனது பகிரங்க விசாரணையை இவ்வாரம் தொடர்ந்து நடத்தியது. தொலைக்காட்சியில் எல்லோரும் காணக்கூடியதாக நடந்துவரும் அவ்விசாரணைத் தொடரில் சத்தியப்பிரமாணம் செய்து பங்குபற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
“பாராளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பின்னாலிருந்து இயக்கியவர் டொனால்ட் டிரம்ப் தான். அவருடைய தனிப்பட்ட ஈடுபாடின்றி எதுவுமே நடந்திருக்காது,” என்று குறிப்பிட்டார் ரிபப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான லிஸ் சேனி. அந்த விசாரணைக் குழுவின் தலைவர் அவராகும். விசாரணைக்குழுவினர் சகலரும் டிரம்ப் அங்கே வந்து சத்தியப்பிரமாணம் செய்து சாட்சியளிக்கவேண்டும் என்ற முடிவில் ஒன்றாகக் கையெழுத்திட்டனர்.
ஜனவரி 06, 2021 வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் குழுவின் கடைசி விசாரணைச் சந்திப்பு இதுவாகும். குறிப்பிட்ட வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாதக் குழுக்கள் பல வாரங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்தையும் அதன் அங்கத்தவர்களையும் தாக்கத் திட்டமிட்டமிட்டிருந்தன என்பதை அமெரிக்க உளவுத் துறை கண்காணித்து அறிந்துகொண்ட விபரங்களும் சாட்சியங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. அந்தத் தீவிரவாதிகள் மனிதர்களைக் கொல்லத் தயாரான நிலையில் இருந்ததாகவும் உளவுத்துறையின் விபரங்களிலிருந்து அறிய முடிகிறது.
டொனால்ட் டிரம்ப் பாராளுமன்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியளிக்க வரப்போவதில்லை என்றே பல அரசியல் அவதானிகளும் தெரிவிக்கிறார்கள். பாராளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்க மறுப்பது தேசியச் சட்டப்படி குற்றமாகும். அப்படி மறுப்பவரை நீதியின் முன்னால் இழுக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன. பாராளுமன்றம் சாட்சி சொல்ல வர மறுப்பவர் மீது வழக்குப் போடும்படி நீதியமைச்சரைக் கோரலாம்.
ஆனால், நவம்பர் மாத ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்காவின் பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் நிலைமை மாறும் அறிகுறிகள் தெரிகின்றன. டிரம்ப்பின் ரிபப்ளிகன் கட்சியினரே அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றலாம் என்று தேர்தல் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. அதன் மூலம் டிரம்ப் சாட்சி சொல்வதை இழுத்தடிக்கலாம்.
ஒருவேளை சகல எதிர்பார்ப்புக்களையும் மீறி டிரம்ப் பாராளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னால் தோன்றினாலும் கூட, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு குடிமகனுக்கு இருக்கும், “தனக்கெதிராகத் தானே சாட்சி சொல்ல மறுத்தல்” என்ற உரிமையைப் பயன்படுத்தலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்