பாலஸ்தீனாவில் தேர்தல் நடத்த, சிதறுண்டிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் ஒன்றுபட்டன.
சுமார் பதினைந்து வருடங்களாக சிதறுதேங்காய் போலாகியிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் அல்ஜீரியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன. அல்ஜீரியாவின் மேற்பார்வையில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக 14 பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றன. அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜீத் தபூனின் அந்த முயற்சி ஒப்பந்தமாக வெற்றிபெற்றதுக்காக ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹானியா கைச்சாத்திட்ட சடங்கில் நன்றி தெரிவித்தார்.
இன்னொரு பாலஸ்தீன இயக்கமான அல் – பத்தாவின் தலைவர்களில் ஒருவரான அஸாம் அல் – அகமத் பேசுகையில், “அல்ஜீரியத் தலைவர் முன்னிலையில் நாம் இங்கே நிற்பதில் பெருமையடைகிறோம். எங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகள் பாலஸ்தீனாவில் ஒரு புற்று நோய் போலப் பரவியிருந்தது,” என்று குறிப்பிட்டார்.
முன்னரும் இதேபோலவே அந்த இயக்கங்கள் ஒப்பந்தங்கள் செய்து பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பதாக வாக்குறுதிகள் கொடுத்து அவற்றை மீறியிருக்கின்றன. எனவே, இந்த ஒப்பந்தம் மீதும் பாலஸ்தீனர்களுக்கு அதிக நம்பிக்கையேதுமில்லையென்று குறிப்பிடப்படுகிறது.
சகல இயக்கத்தினரும் சேர்ந்து ஒரு கூட்டரசை நிறுவுவதாக அந்த ஒப்பந்தத்தில் இல்லையென்று ஹமாஸ் தலைமை தெரிவிக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் தேர்தலை நடத்துவதற்கான ஒத்துழைப்புகள் கொடுப்பதையே ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. ஒரு வருடத்துக்குள் ஒரு ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் பாலஸ்தீன மக்களிடையே நடத்துவதாக அவ்வியக்கங்கள் குறிப்பிடுகின்றன. தற்போதைய பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ் மட்டுமே சர்வதேச அளவில் பாலஸ்தீனர்களின் ஒரேயொரு பிரதிநிதியென்றும் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்