சேர்சன் நகரின் ரஷ்யர்களை வெளியேற்றி ரஷ்யாவில் குடியிருப்பு வசதிகள் கொடுக்க ரஷ்யா உறுதியளிக்கிறது.
உக்ரேனிடமிருந்து ரஷ்யா போரில் கைப்பற்றிய பிராந்தியங்களைத் தனது நாட்டின் பகுதிகளாகப் பிரகடனம் செய்தது அறிந்ததே. அதே பிராந்தியங்களின் சில பகுதிகளைத் தாக்கி உக்ரேன் இராணுவம் மீளக் கைப்பற்றியிருக்கிறது. அத்துடன் மேலும் முன்னேறி வருகிறது. கருங்கடலையடுத்திருக்கும் உக்ரேனின் தெற்கில் சேர்சன் மாகாணத்தின் பகுதிகளில் உக்ரேன் முன்னேறிக்கொண்டிருப்பதால் அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த ரஷ்ய மொழி பேசுகிறவர்களை ரஷ்யாவுக்கு வெளியேற்ற முடிவெடுத்திருக்கிறது ரஷ்யா.
குறிப்பிட்ட பகுதிகளில் தீவிரமான போர் நடந்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடும் சேர்சன் மாகாணத்துக்காக ரஷ்யா நியமித்திருக்கும் ஆளுனர் விரும்புகிறவர்களுக்கு ரஷ்யாவில் வேறிடங்களில் குடிபெயர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். ரஷ்யாவில், கிரோஸ்னொடார், ரொஸ்டோவ், ஸ்டாவ்ரொபூல் மற்றும் கிரிமியா மாகாணங்களுக்கு அவர்களை மாற்ற ரஷ்ய அரசு ஏற்பாடு செய்திருப்பதாக ஆளுனரின் வானொலிச் செய்தி குறிப்பிடுகிறது.
அதேசமயம் ரஷ்யாவின் தாக்குதல் உக்ரேனின் நகரங்கள் பலவற்றின் மீது தொடர்கிறது. கிரிமியா – ரஷ்யா பாலத்தின் மீது நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே அத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஜனாதிபதி புத்தின் குறிப்பிட்டிருந்தார். உக்ரேனின் முக்கிய தொலைத்தொடர்பு மையங்களைக் குறிவைத்தே ரஷ்யாவின் தாக்குதல்கள் நடந்து வருவதாக உக்ரேனிய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்