“உக்ரேனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல, மேலதிகமாக ரஷ்ய இராணுவத்தினரைப் போருக்குத் தயார்செய்யப்போவதில்லை.” – புத்தின்.
கசக்ஸ்தானில் நடக்கும் பிராந்தியத் தலைவர்கல் மாநாடு ஒன்றில் பங்கெடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புத்தின், உக்ரேன் மீது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைக்குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும் தற்போதைக்கு அவை தொடரப்போவதில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன் உக்ரேன் மீதான போரை ஆரம்பித்ததற்காகத் தான் வருந்தவில்லை, அது தகுந்த நேரத்தில் குறிக்கோள் ஒன்றுடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் இராணுவத்தில் போருக்குத் தயாரான நிலையில் இருக்க 300,000 வீரர்களை அழைக்கும்படி சில வாரங்களின் முன்பு புத்தின் உத்தரவிட்டிருந்தார். ரஷ்ய மக்களிடையே எதிர்ப்புகளை எதிர்கொண்டு, பல ரஷ்யர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்த அந்த நடவடிக்கையைப் பற்றியும் புத்தின் குறிப்பிட்டார். ஏற்கனவே 222,000 பேர் ரஷ்ய இராணுவத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும், படை திரட்டும் நடவடிக்கை விரைவில் முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்ட அவர், இப்போதைக்கு மேலும் அதிகமானவர்களைப் போருக்குத் தயார்செய்யும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.
ரஷ்ய இராணுவம் சமீப வாரங்களில் உக்ரேனிய இராணுவத்திடம் நிலப்பகுதியை இழந்து வருவது தெரிந்ததே. இழந்துகொண்டிருக்கும் பகுதிகள் ரஷ்யாவின் பிராந்தியம் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் உக்ரேன் தனது நாட்டின் இழந்த பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தொடர்கிறது. அதனால், புத்தினை அவரது சகாக்கள் சிலரும், ரஷ்ய ஊடகமும் விமர்சித்து வருகின்றனர். உக்ரேன் தனது கிழக்கிலும், தெற்கிலும் ஒவ்வொரு நகரமாக, இழந்த பகுதிகளைத் திரும்பிக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது.
நாட்டோ அமைப்பில் சேருவதற்காக சமீப நாட்களில் விண்ணப்பித்திருக்கும் உக்ரேனுக்கு மேலும் இராணுவ வழங்க அமெரிக்கா உறுதிகொடுத்திருக்கிறது. வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள உக்ரேன் பாதுகாப்பு அரண்களை அமெரிக்காவிடமும், ஐரோப்பாவிடமும் கேட்டிருந்தது. அவற்றையும் உக்ரேனுக்கு வழங்கத் தயார் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்