அரசியல் கைதிகளை வைத்திருக்கும் ஈரானியச் சிறையில் தீவிபத்து, கலவரம், மரணங்கள்.
சனிக்கிழமை இரவன்று ஈரானின் பிரபலச் சிறையான எவின் மீது பெரிய தீப்பிழம்புகள் எழுந்ததை தெஹ்ரானிலிருந்தவர்களால் காணமுடிந்தது. நாட்டின் அரசியல் கைதிகளைக் கொண்டிருக்கும் அச்சிறையில் சிறைக்கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு உண்டாகி அது கலவரமாகிச் சிறையில் தீப்பிடித்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நான்கு சிறைக்கைதிகள் இறந்து சுமார் 61 பேர் காயமடைந்திருப்பதாகச் சிறையதிகாரிகள் சார்பில் குறிப்பிடப்படுகிறது.
சுமார் ஒரு மாதமாகவே ஈரானின் நகரங்களிலெல்லாம் எழுந்திருக்கும் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதே சிறையில் நடந்த கலவரங்களும் என்று மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்ப்புப் போராட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் அந்தச் சிறைக்கே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகளும் அங்கே இருக்கிறார்கள். அத்துடன் ஈரானால் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்களும் எவின் சிறைச்சாலைக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளைக் கொண்ட எவின் சிறைச்சாலை சர்வதேச அளவில் பிரபலமாகக் காரணம் அங்கே பலரும் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்படுவது ஆகும். அங்கிருப்பவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியிருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் எச்சரிக்கின்றன. சிறைக்கும் வெளியுலகுக்குமான தொடர்புகள் யாவும் வெட்டப்பட்டிருக்கின்றன. இணையத்தளத்தின் மூலமும் சிறைக்குள் என்ன நடக்கின்றது என்பது வெளியே வரவில்லை.
சிறைச்சாலைக்குப் போகும் வழிகளையெல்லாம் ஈரானின் பாதுகாப்புப் பொலீசார் தடை செய்துவிட்டார்கள். வெளியே போராடுபவர்கள் சிறைச்சாலைக்குப் போகாமலிருக்கவே அத்தடைகள் போடப்பட்டிருக்கின்றன. சிறைக்குள்ளிருந்து சனியன்று இரவுமுதல் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் பல சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்