ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சசிகலாவின் கைகள் இருக்கின்றனவா?
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதின் பேரில் அவரது ஆரோக்கியம், மருத்துவம், மருத்துவர்கள் பற்றியவற்றைப் பற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடுமாறு பணிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. 608 பக்கங்களிலான அவ்வறிக்கை, முன்னாள் அஇஅ.தி.மு.க அரசின் அமைச்சர்கள், சசிகலா உட்பட பலரின் தலைமீது வெடிகுண்டைப் போட்டிருக்கிறது.
ஆறுமுகசாமி அறிக்கை தமிழக சட்டசபையின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. நீண்ட காலமாக ஜெயலலிதாவின் வலதுகரமாக இருந்த சசிகலா, முன்னாள் தமிழக மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டொக்டர் கே.எஸ். சிவகுமார், மருத்துவக் காரியதரிசி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நடவடிக்கைகளில் சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது அறிக்கை. அதனால், குறிப்பிட்ட நபர்கள் ஜெயலலிதாவின் மரணத்தில் குற்றவாளிகளா என்று தெரிந்துகொள்ள விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
2017 இல் ஆட்சியிலிருந்த அஇஅ.தி.மு.க அரசின் முதலமைச்சர் ஓபி.எஸ் “தர்மயுத்தம்” என்ற பெயரில் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிடப்பட்ட கொலையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதன்படி, ஆறுமுகசாமி ஆராய்வுக் குழு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள் உட்பட ஜெயலலிதாவைச் சுற்றிப் பணியாற்றிய 156 பேர் விசாரிக்கப்பட்டார்கள்.
2016 டிசம்பர் 4 ம் திகதி 15.00 – 15.30 க்கும் இடையே இறந்ததாகச் சில சாட்சியங்கள் குறிப்பிடும்போது அப்போலோ மருத்துவமனை இறப்பு நேரத்தை டிசம்பர் 5, 11.30 என்கிறது. எனவே, வேண்டுமென்றே அவரது மரணம் தாமதப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதா அப்படியானால் அதன் காரணங்கள் என்ன?
அமெரிக்காவிலிருந்து ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்ய வரவழைக்கப்பட்ட சமீன் சர்மா பரிந்துரை செய்ததுபோல ஏன் இருதய அறுவைச்சிகிச்சை செய்யப்படவில்லை?
மேற்கண்ட கேள்விகளையும் ஆறுமுகசாமி அறிக்கை எழுப்பியிருக்கிறது.
ஜெயலலிதாவின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் குற்றங்கள் ஏதாவது செய்தாரா என்றும் சந்தேகம் எழுப்பி அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றித் தெரிந்திருந்தும் அப்பலோ மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டொக்டர் பிரதாப் சி.ரெட்டி பத்திரிகையாளர்களைக் கூட்டி “எந்த நிமிடத்திலும் வீட்டுக்குப் போய்விடலாம்,” என்று குறிப்பிட்டிருந்ததையும் ஆறுமுகசாமி அறிக்கை விட்டுவைக்கவில்லை.
டொக்டர் பிரதாப் சி.ரெட்டி பொய்யான விபரங்களை வெளியிடக் காரணம் என்னவென்பதை விசாரிப்பது அரசின் கடமை என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
விசாரணைக்கு உத்தரவிட்ட ஓபிஎஸ்-ஐயும் விடவில்லை ஆறுமுகசாமி அறிக்கை.
“ஜெயலலிதாவைச் சுற்றியிருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவில் முக்கியமானவர் ஓ பன்னீர்ச்செல்வம். அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. ஜெயலலிதா இறந்தவுடன் படு வேகமாக அவர் தன்னை முக்கியத்தவராக்கிக்கொண்டு முதலமைச்சர் பதவியைப் பற்றிக்கொண்டது தற்செயலான சம்பவமல்ல,” என்கிறது அறிக்கை.
சாள்ஸ் ஜெ. போமன்