தீபாவளியும் தமிழர்களும்

எனது சிறுவயதில் ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாட்களுள் தீபாவளியும் ஒன்று. அந்த நாட்களில் பல சாதாரண, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், பிள்ளைகளுக்குப் புதுவருட நாளின் பின்னர் புது உடுப்பு கிடைக்கும் நாள் தீபாவளியாகும். ஆனாலும் நான்  வளரும்போது தீபாவளி கொண்டாடுவது தொடர்பான சர்ச்சையும் நான் வாழும் சூழலில் வளர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல, இது தமிழ் மன்னன் நரகாசுரனை ஆரியர் கொன்ற நாள். நாமே அதைக் கொண்டாடுவது முட்டாள்தனமானது என்ற வாதம் வலுபெற்றது.  

ஆனாலும் பொதுவாக அஞ்ஞான இருள் அகன்று அறிவொளி பரப்பும் நாள், தீமை அழிந்து நன்மை உருவாகும் நாள் என்ற குறியீடாக தீபங்கள் ஏற்றி வழிபடும் நாள் என்றே தீபாவளி குறிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு தமிழர்கள் மத்தியில் ஒரு புராண கதையும் இந்தியாவில் பல பகுதிகளிலும் பல கதைகளும் சொல்லப்படுகின்றன.  

  • 1. தமிழர்கள் மத்தியில் நரகாசுரனை விஷ்ணு சங்காரம் செய்த நாள் என்று சொல்லப்படுகிறது.
  • 2. வடஇந்தியாவில், இராமன் இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பிய நாள் என்று கொண்டாடப்படுகிறது.  
  • 3. அதேநேரத்தில் ஆசீவகத்தின் (தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு வாழ்க்கையும்) நம்பிக்கையில் தீபாவளி இராவணனை வழியனுப்பும் நாள் என்றும் சொல்லப்படுகிறது.  
  • 4. மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து,  இத்தினத்தைச் இந்தியாவின் வடக்கில் சமணர்கள் கொண்டாடுகின்றனர் (ஜைன சமயம்). மாவீரர் கி.மு. 500 ஆண்டளவில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
  • 5. கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்த நாள் என்று சொல்லப்படுகிறது.
  • 6. 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய ஆறாவது குருவான குரு. கர்கோபிந்தும் 52  இளவல்களும் 1619 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டபோது பொற்கோவிலில் தீபமேற்றி வழிபட்டதாகவும் அந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்வதாகச் சொல்லப்படுகிறது.  

இவ்வாறாக இந்தியாவின் பல பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் வட இந்தியாவில் கொண்டாடப்படும் அளவிற்கு தென்னிந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. ஆனால்


2 / 5

தெலுங்கானாவில் (ஹைதராபாத்) தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம், கல்கத்தாவில் தீபாவளி காலத்தில் காளி வழிபாடே முன்னுரிமை பெறுகிறது.

இனி சர்ச்சையாக பேசும் விடயத்துக்கு வருவோம். இன்று பல தமிழ் உணர்வாளர்கள் ஆரியர்கள் தமிழ் மன்னனான நரகாசுரனைக் கொன்ற நாளை தந்திரமாக தமிழர்களே கொண்டாட வைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.  இதற்கு ஆதாரமாக இவர்கள் சொல்வது விஷ்ணு – நரகாசுரன் கதையைத்தான்.  

இந்து சமயத்தில் அறநெறிகளைக் கற்பிக்க கற்பனையான புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இந்தக் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், கதையின்படி விஷ்ணுவுக்கும் அவரது இரண்டு மனைவியருள் ஒருவரான பூமாதேவிக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைதான் பவுமன் (பலமானவன்). அவனது தீய நடத்தையினாலேயே நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். தன் தாயால் மட்டுமே கொல்லப்பட வரம் பெற்றதால், பூமாதேவி சத்தியபாமாவாகவும்  விஷ்ணு கிருஷ்ணராகவும் பிறந்து, அந்தப் பிறப்பில் நரகாசுரன் அவனது பெற்றோரால் கொல்லப்படுகிறான். இதுதான் கதை.  

இந்தக் கதையின்படி பார்த்தாலும் எப்படி தாய், தந்தை ஆரியராகவும் பிள்ளை திராவிடனாகவும் இருந்திருக்க முடியும்? அதைத்தவிர, பூனைக்கண், வெள்ளைத்தோல் அற்ற கரிய நிறக் கிருஷ்ணன் எப்படி ஆரியனானான்? நரகாசுரன் திராவிடன் என்பதற்கும், அவன் தமிழன் என்பதற்கும் இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன?

அடுத்ததாக, இவர்கள் முன்வைப்பது தீபாவளியைத் தமிழர்கள் கொண்டாடியதில்லை, இப்போது ஏன் கொண்டாட வேண்டும் என்ற கருத்து.

சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தென்னகத்தில் ஆரம்ப காலத்தில் சைவ சமயமே செழித்தோங்கியிருந்தது. அதேபோல முருகன் வழிபாடும் தென்னிந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. அதேநேரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற சமண சமயமும் தமிழகத்தில் பரவியிருந்தது. சைவ, வைணவ சண்டைகளும் நடைபெற்று வந்தது. சமணத்திற்கு எதிரான சைவ நாயன்மார்களின் எதிர்ப்பும் இருந்த காலம் இது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு பிரிவுகளை இணைத்து ஒரு குடைக்கீழ் கொண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது. பிரித்தானியர்தான்


3 / 5

தங்கள் வசதிக்காக கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லாத பல மதங்களை இணைத்து இந்து சமயம் என்று வகைப்படுத்தினர் என்று சொல்லுவோரும் உண்டு.  

வைணவ, சக்தி வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் அதனோடு இணைந்த தீபாவளியை, அந்த காலங்களில் கொண்டாடியிருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் தென்னாட்டு மன்னர்கள் அதிகம் பின்பற்றிய சைவ சமயத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் இந்த இரண்டு சமயங்களுக்கும் கொடுக்கப்படாது இருந்திருக்கலாம். அக்காலப் பகுதியில் தீபாவளி கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லாதபோதும், கி.பி.16ஆம் நூற்றாணடு முதல் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன.  

இந்தக் காலப் பகுதியில்தான் தமிழ்நாட்டின் பெரும்பகுதி விஜயநகர பேரரசின்  ஆட்சியின்கீழ் இருந்தது. விஜயநகர பேரரசு தோற்றம் பெற்ற தெலுங்கு பிரதேசத்தில் காளியை முன்னிறுத்தி தீபாவளி மிக நீண்ட காலமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆந்திராப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் அன்றைய கீழைச் சாளுக்கிய தேசம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெரும் அதிகாரத்துடன் ஆண்ட சோழர்களுடன் நட்புடன் இருந்தவர்கள், அதேநேரம் சோழர்களுடன் திருமண உறவும் வைத்திருந்தவர்கள் என்பதை இங்கு குறிப்பிடலாம்.  

எமது முப்பாட்டன் முருகன் என்று சொல்லி பெருமைப்படும் தமிழர் சிலர் முருகனால் கொல்லப்பட்ட சூரபத்மனை அசுரன் என்கிறார்கள். அது உண்மையென்றால் தமிழ் கடவுள் முருகனால் கொல்லப்பட்ட அசுரனான சூரன் தமிழனாக இருக்க முடியாது. அதேபோல இன்னொரு அசுரனான நரகாசுரனும் தமிழனாக இருக்க முடியாது.  

இதேவேளை, மறுசாரார் சூரபத்மனைக் கொன்ற ஸ்கந்தன் என்பது வேறு, தமிழ் கடவுள் முருகன் வேறு என்ற விவாதத்தை முன்வைப்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இருந்தபோதிலும், 2500 – 3000 வருட வரலாறு கொண்டதாகக் கருதப்படும் திருச்செந்தூர் சூரபத்மனைக் கொன்றபின் முருகன் தங்கியிருந்த தளமாகக் கருதப்படுகிறது. அந்த இடத்திலேயே திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது.


4 / 5

புராண கதைகளின்படியும் நரகாசுரன் அஸ்ஸாம் பகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்படியானால், இன்றும் அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினர் தமிழ் பேச வேண்டுமே? குறைந்தது தமிழ் மொழியின் திரிபடைந்த வடிவத்தில் ஒரு மொழியைப் பேசவேண்டும் அல்லவா? ஏன் பேசுவதில்லை?

உண்மையில் தீபாவளியை நாங்கள் கொண்டாடக்கூடாது என்று சொல்லுவதற்கு வலுவான வரலாற்று சான்று இவர்களிடம் இல்லை. எல்லாமே வெறும் வார்த்தையாடல் மூலமான விவாதங்கள்தான். தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும்வரை இந்த விவாதமும் ஓயப்போவதில்லை.

இந்த விவாதங்கள் ஓயப் போவதில்லை என்பதற்குச் சான்றாக தற்போது புதிதாக இரண்டு கருத்தாடல்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

  • 1. தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. 1732ல் வெளியிடப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதியில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் – தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்” என்று ஆய்வாளர் பொ. வேல்சாமி வாதிக்கிறார்.
  • 2. தற்போது ராஜராஜ சோழனின் பெருமைகளை தமிழர்கள் பலர் முன்னரைவிட அதிகம் பேசிவரும் சூழலில், இந்தத் தீபாவளி ராஜேந்திரசோழன் இமயம் வரை சென்று வட இந்தியரை வெற்றி கொண்டதன் அடையாளமே தீபாவளி என்று புதிதாக இன்னொரு கதையும் பரப்பப்படுகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியா, இலங்கை, மலேசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பலநாடுகளிலும் வாழும் பல்வேறு மொழி பேசும் மக்கள்  இன்னமும் தீபாவளியை தமது பாரம்பரிய முறைகளிலும், சிறிது நவீனம் கலந்தும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இனியும் கொண்டாடுவார்கள்.  

உழைத்துக், களைத்து, சலித்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதே இவ்வாறான கொண்டாட்டங்கள்தான். அதேநேரம் இந்தியா, இலங்கை


5 / 5

போன்ற நாடுகளில் வாழும் பல உழைப்பாளிகளுக்கு போனஸ் கிடைக்கவும் இந்த நாள் வழி செய்கிறது.  

உறுதிப்படுத்தாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எதற்காக தமிழ் மக்களின் சின்னச் சின்ன சந்தோசங்களில் கல்லெறிய வேண்டும். விரும்பினால் நரகாசுரன் கதையைத் தூக்கிவிட்டு “அஞ்ஞான இருள் அகன்று அறிவொளி பரப்பும் நாள், தீமை அழிந்து நன்மை உருவாகும் நாள் என்ற குறியீடாக தீபங்கள் ஏற்றி வழிபடும் நாள் தீபாவளி” என்று சொல்லிக் கொடுங்கள்.  

எழுதுவது : வீமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *