பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனது கண்களில் ஒன்றில் பார்வையிழந்திருக்கிறார்.
இந்தியப் பின்னணிகொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது இலக்கியத்துக்காக உலகெங்கும் அறியப்பட்டவர். அவரது மிகவும் சர்ச்சைக்கு உரிய படைப்பான சாத்தானின் வேதங்கள் (The Satanic Verses)நூலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மத உணர்வைப் பாதிக்கும் வகையிலான புத்தகம் என்று குறிப்பிடப்பட்டு முதல் நாடாக இந்தியா தடை விதித்தது. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளிலும் அப்புத்தகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் நியூ யோர்க்கில் நடந்த படைப்பிலக்கியத்தில் சுதந்திரம் என்ற நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் மேடையிலிருக்கும்போது தீவிரவாதி ஒருவனால் கத்திக்குத்துக்கு உள்ளாகியிருந்தார். அதன் பின்பு உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சைக்கு உள்ளானார்.
அவருடைய வெளியுலகத் தொடர்பாளர் சமீபத்தில் ஸ்பெயின் சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியில் ருஷ்டியின் நிலைமை பற்றி விபரித்திருக்கிறார். ஒரு கண்ணில் பார்வையை இழந்து அவரது கழுத்தில் மூன்று கடுமையான காயங்கள் இருக்கின்றன. ஒரு கையில் நரம்புகள் வெட்டப்பட்டதால் அக்கை செயலிழந்துள்ளது. அவரது மார்பு மற்றும் உடற்பகுதியில் மேலும் 15 காயங்கள் உள்ளன.
24 வயதான ஹாதி மத்தார் என்பவனே ருஷ்டியைக் கத்தியால் குத்தியவனாகும். ருஷ்டி உயிரோடு தப்பிவிட்டார் என்பதையறிந்து ஏமாற்றமடைந்ததாக விசாரணையில் அவன் குறிப்பிட்டிருக்கிறான். தன் மீது குற்றமெதுவும் இல்லை என்று வாதாடி வரும் மத்தார் பிணையில் போக அனுமதியின்றி நீதிமன்ற விசாரணைக்காகச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறான்.
1991- ஆம் ஆண்டு ருஷ்டியின் நாவலை ஜப்பானிய மொழியில் பெயர்த்தவர் கொலை செய்யப்பட்டதுடன், இத்தாலிய மொழி பெயர்ப்பாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு சல்மான் ருஷ்டியின் துருக்கி மொழி பெயர்ப்பாளரை குறி வைத்து ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் 37 பேர் உயிரிழந்திருந்தனர்.
சாள்ஸ் ஜெ. போமன்