ஆஸ்ரேலியாவின் பணவீக்கம் 32 வருடங்களில் காணாத உயரத்தை எட்டியிருக்கிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா உக்ரேன் போரின் விளைவுகளால் நீண்ட காலத்தில் அனுபவிக்காத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்ரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடத்துக்கான பணவீக்கம் 7.3 % என்று ஆஸ்ரேலியாவின் புள்ளிவிபரங்களிலிருந்து அறியமுடிகிறது. 1990 களுக்குப் பின்னர் இந்த அளவில் ஆஸ்ரேலியர்கள் தமது பணம் மதிப்பிழந்திருப்பதை முதல் தடவையாக எதிர்கொள்கிறார்கள்.
சாதாரணமான உணவுப்பொருட்கள், எரிபொருள், ஆகியவையின் விலையுயர்வை மக்கள் மாதாமாதம் தமது செலவுகள் அதிகரிப்பதிலிருந்து அறிய முடிகிறது. கொரோனாக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சர்வதேசப் பொருளாதார அதிர்ச்சி ஆஸ்ரேலிய மக்களையும் பாதித்திருக்கிறது.
பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால் கடந்த வருடங்களில் தொழிலாளர்கள் பெற்ற ஊதிய உயர்வுகளையும் பணவீக்கம் விழுங்கிவிட்டிருக்கிறது. ஆஸ்ரேலிய மத்திய வங்கி நாட்டில் ஏற்படப்போகும் அசாதாரணமான பணவீக்கத்தைப் பற்றி ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், மாதாமாதம் ஏற்பட்டிருக்கும் பணவீக்கமானது மத்திய வங்கி இவ்வருட ஆரம்பத்தில் கணித்திருந்ததையும் விட உயர்வாக இருக்கிறது.
ஆஸ்ரேலிய அரசு பணவீக்கத்தை எதிர்பார்த்துத் தனது செலவுகளைக் கட்டுப்படுத்தியிருப்பதாகச் சமீபத்தில் தெரிவித்திருந்தது. பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்போர் தமது வாழ்க்கைச்செலவு உயர்வை ஈடுசெய்ய அரசின் பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறார்கள். விலையுயர்வுகளைப் பொருளாதார உதவியால் ஈடுசெய்வது பணவீக்கத்தை மேலும் உயர்த்துவதாகவே முடியும் என்று குறிப்பிடுகிறது அரசு.
சமீபத்தில் ஆஸ்ரேலியாவின் கிழக்குப் பிராந்தியந்தியங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உணவுப்பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்தலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அவை ஏற்கனவே கடந்த வருடத்தின் விலைகளை விட 8.8% ஆல் உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்