பிரிட்டனின் இவ்வருடத்துக்கான மூன்றாவது பிரதமர் ரிஷி சுனாக் கட்சியை ஒன்று கோர்க்கும் அமைச்சரவையை அறிவித்தார்.
பிரிட்டனின் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமரான ரிஷி சுனாக்கின் ஒவ்வொரு நகர்வுகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. தனக்கு முன்னால் 45 நாட்களே பிரதமராயிருந்த லிஸ் டுருஸ் செய்த தவறுகள் சில திருத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டுப் பதவியேற்ற சுனாக் டுருஸ் போன்று பல இனத்தவரை ஒன்றுசேர்க்கும் அமைச்சரவையைத் தெரிந்தெடுக்கவில்லை. தனக்கு முன்னாலிருக்கும் பன்முகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏதுவான அனுபவபூர்வமான அமைச்சரவையை ஒன்றுபடுத்தியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
தனது நிதியமைச்சரை வீட்டுக்கனுப்பிவிட்டு டுருஸ் பதவியிலமர்த்திய ஜெரொமி ஹண்ட் அப்பதவியில் தொடருவார். கட்சிக்குள் நீண்டகாலமாகப் பல முக்கிய பதவிகளை வகித்தவர் ஹண்ட். சமீபகாலத்தில் கட்சிக்குள் உண்டாகியிருக்கும் பிளவுகளைத் தாண்டி மதிப்புப் பெற்றிருப்பவர். அதேபோலவே நிதித்துறை, வர்த்தகத்துறை வட்டாரங்களிலும் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டவர். டுருஸ் அரசு அறிமுகப்படுத்திய வரிக்குறைப்புகளில் பெரும்பாலானவை ஹண்ட் வந்தவுடன் பின்வாங்கப்பட்டன. அவரைத் தன்னருகில் முக்கிய பதவியில் நிலைக்க வைத்திருப்பதன் மூலம் சுனாக் கட்சிக்குள் ஒற்றுமையை உண்டாக்க விரும்புவதைக் காட்டுகிறார்.
பலரையும் வியக்கவைத்த மேலுமொரு நகர்வு உள்துறை அமைச்சராக சுவேலா பிரேவர்மானை மீண்டும் அப்பதவிக்குக் கொண்டுவந்திருப்பதாகும். டுருஸ் அரசிலிருந்து தானே வெளியேறியவர்களுள் பிரேவர்மான் முக்கியமானவர். தனது அமைச்சின் உத்தியோகபூர்வமான தேவைக்குத் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியைத் தவறுதலாகப் பாவித்ததாகக் குறிப்பிட்டுப் பதவி விலகிய பிரேவர்மான் டுருஸில் நம்பிக்கையின்றியே வெளியேறியதாகக் கவனிக்கப்பட்டது.
தனக்கு முன்னரிருந்த பிரதமர்கள் உண்டாக்கிய அமைச்சரவையில் இருந்ததை விடக் குறைவான அளவில் சுனாக் பெண்களுக்கு இடமளித்திருப்பதும் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. ஆண் – பெண் சம உரிமை என்பதைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் இயங்கும் சமயத்தில் சுனாக் அவ்விடயத்தில் பின்னோக்கிப் போகிறார். சுனாக்கின் அமைச்சரவையில் 22 விகிதமானவர்கள் மட்டுமே பெண்கள்.
தனது 31 பேர் அமைச்சரவையில் டுருஸ் 7 வெள்ளையரல்லாதோரைத் தெரிந்தெடுத்திருந்தார். சுனாக் அதைக் குறைத்திருக்கிறார். அவர் உட்பட 5 பேர் மட்டுமே வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்