கத்தார் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகளைச் சாடுகிறார்கள் ஆஸ்ரேலிய அணியினர்.
சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் உலக உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடக்கவிருக்கிற்து என்ற செய்தி வெளியானதிலிருந்து அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மனித உரிமைக்குழுக்கள் பலவும் கத்தாரில் உரிமைகள் எப்படியெல்லாம் மீறப்படுகின்றன என்பதைப் பற்றிய விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாக வெளியிட்டு வருகின்றன.
கத்தாரில் மோதவிருக்கும் குழுக்களில் முதல் குழுவாக அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்களைச் சாடியிருக்கிறது ஆஸ்ரேலியாவின் உதைபந்தாட்ட தேசிய ஆண்கள் அணி. அணியினர் ஒன்றிணைந்து தமது அறிக்கையை படமொன்றின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.
“சமீப காலத்தில் கத்தாரில் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சீர்திருத்தத்திற்கான இந்தப் பாதையைத் தொடர அனைத்து பங்குதாரர்களையும் ஊக்குவிக்கிறோம். எவ்வாறாயினும், சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் துன்பங்களுடன் இந்த போட்டி தொடர்புடையது என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம், அதை எங்களால் புறக்கணிக்க முடியாது. உலகக் கோப்பையை கத்தாரில் நடத்து என்ற எடுத்த முடிவானது, எண்ணற்ற சக ஊழியர்களின் துன்பத்தையும் பாதிப்பையும் விளைவித்துள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த புலம்பெயர்ந்தோர் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் எண்கள் அல்ல,” என்று ஆஸ்ரேலிய அணியினர் ஒன்று சேர்ந்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலகக்கோப்பைக்கான மோதல்கள் நடத்துவதற்காக கட்டப்பட்ட அரங்குகள், நாடெங்கும் விருந்தினர்களைச் சந்திப்பதற்காகப் போடப்பட்ட போக்குவரத்துத் தொடர்புகளைக் கத்தாருக்கு வரவழைக்கப்பட்ட வறிய நாட்டுத் தொழிலாளர்களே கட்டியெழுப்பினார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலைத்தள விபத்துக்களில், வெம்மையில் இறந்தார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தமது ஊதியங்களுக்காக ஏமாற்றப்பட்டனர். இவ்விடயங்கள் பல கோணங்களிலிருந்து கத்தார் மீது விமசிக்கப்படுகின்றன.
தமது நாட்டின் மீதான விமர்சனங்களைச் சமீபத்தில் எதிர்கொண்ட அரசன் ஷேய்க் தமிம் பின் ஹமாத் அல் – தானி, “நாம் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்த ஆரம்பித்தது முதல் எங்கள் நாட்டின் மீதான விமர்சனங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. எங்களைப் பாரதூரமாக விமர்சித்தாலும் அவைகளை நாம் நல்ல மனதுடம் பொறுத்துக் கொள்கிறோம். அவைகளில் பல எங்களைத் திருத்திக்கொள்ள உதவியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவை தொடர்கின்றன. இரட்டைத்தனமாக இருக்கும் விமர்சனங்களும் எங்கள் மீது வீசப்படுகின்றன. அவற்றின் உண்மையான பின்னணி என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்