நைஜீரியாவின் தலைநகரிலிருந்து வெளியேறும்படி அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிலிருந்து தனது ராஜதந்திரிகளின் குடும்பங்களை வெளியேறும்படி அமெரிக்காவின் உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நகரில் அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் நைஜீரியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படியும் அபுஜாவுக்குள் நுழைய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. அரசாங்க கட்டடங்கள், மத தலங்கள் உட்பட்ட பொது இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னரே அமெரிக்க அரசு அபுஜாவில் தமது தூதுவராலயத்தில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற உதவுவதாக அறிவித்திருந்தது. தீவிரவாதத் தாக்குதல்கள் எவரிடமிருந்து வரக்கூடும் என்பது பற்றிய விபரங்கள் எதையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இஸ்லாமியத் தீவிரவாதிகளான பொக்கோ ஹறாம் இயக்கத்தினர் நைஜீரியாவில் கடந்த பல வருடங்களாகவே தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். தலைநகரான அபுஜாவில் இதுவரை எந்தத் தாக்குதலும் நடந்திருக்கவில்லை.
இவ்வருட நடுப்பகுதியில் வெளியாகியிருந்த செய்திகளின்படி பொக்கோ ஹறாம் இயக்கத்தினர் மத்திய கிழக்கில் கொடுரமான தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் இயக்கத்தினருடன் சேர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. ஐ.எஸ் இயக்கத்தினர் ஜூலை மாதத்தில் அபுஜாவின் சிறைச்சாலையைத் தாக்கி அங்கிருந்த சுமார் 440 தீவிரவாதிகளை விடுதலை செய்திருந்தார்கள்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து நைஜீரியாவின் அரசு அபுஜாவில் தனது பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. பிரிட்டன், கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகளும் தமது குடிமக்களுக்கு நைஜீரியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் தமது குடிமக்களுக்கான நைஜீரியா நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்