வெப்ப அலைப்புயல்காற்று நள்கே பிலிப்பைன்ஸில் சுமார் 45 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் நள்கே மிக மோசமான அழிவுகளை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வினாடிக்கு 26 வீசும் காற்றுடன் கலந்த மழையாக வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகங்களை சாடிச் சென்றது புயல் நள்கே. அதன் தாக்குதல்களால் இறந்தவர்களின் தொகை 45 என்று நாட்டின் உத்தியோகபூர்வமான செய்திகள் கூறும் அதே சமயம் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று எச்சரிக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கிலிருக்கும் மிண்டானாவ் தீவுப்பகுதி புயலின் ஆரம்பத் தாக்குதலிலேயே மோசமான அழிவுகளை எதிர்கொண்டது. அங்கிருக்கும் கிராமமொன்று முழுசாகவே புயலாலும் நீராலும் தாக்கப்பட்டு மண்சரிவால் மூடப்பட்டது. அரசின் எச்சரிக்கை அறிவிப்பைக் கேட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களை நாட முன்னரேயே ஏற்பட்ட தாக்குதலால் கிராமத்தையடுத்திருந்த மலையொன்று இடிந்துவிழ மக்கள் வீடுகளைவிட்டுத் தப்பியோட வழியின்றி வீடுகளுக்குள்ளேயே மூழ்கி இறந்துவிட்டதாகத் தெரிகிறது. 80 பேர் காணாமல் போய்விட்டதாகத் தெரியவரும் அந்தக் கிராமத்தில் மீட்புப் படையினர் துரிதமாக பணியாற்றி வருகிறார்கள்.

வருடாவருடம் சுமார் 20 க்கும் குறையாத புயல்களால் பிலிப்பைன்ஸ் தாக்கப்படுவது வழக்கம். காடுகள் அழிக்கப்பட்ட மலைகள், குன்றுகள் புயல்கல் சூறாவளிகளால் பாதிக்கப்படும்போது இன்னும் அதிகமான மண்சரிவுகள் ஏற்படும் என்று நாட்டின் வானிலை கண்காணிப்பு மையம் எச்சரித்து வருகிறது. 

புயல் நள்கே தாக்கிய பகுதிகள் ஏற்கனவே இவ்வருடம் உண்டாகிய புயல்களில் பாதிக்கப்பட்டவையே. அச்சமயங்களில் இடிபட்ட தமது வீடுகளை மக்கள் மீண்டும் சரிப்படுத்த முன்னரேயே இந்தப் புயல் தாக்கியிருக்கிறது. 

500 க்கும் அதிகமான மீட்டுப் படைக் குழுவினரை நாடெங்கும் உதவுவதற்காகப் பிலிப்பைன்ஸ் அரசு அனுப்பியிருக்கிறது. புயல் நள்கே தென் சீனக் கடலை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறது. அதையடுத்து வியட்நாமின் மீது அது தாக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *