ஒலிம்பிக் வீராங்கனை பிரிட்டனி கிரினரின் மேன்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் [Brittney Griner]. பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க முற்பட்டபோது அவரிடம் சிறிய அளவில் கஞ்சா எண்ணெய் இருந்ததால் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில் அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒன்பது வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
தனது தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்து தனக்குக் கருணை காட்டும்படி கிரினர் வேண்டியிருந்தார். ஒக்டோபர் 25ம் திகதி செவ்வாயன்று அவரது மேன்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் பரிசீலித்தது. ஆனால், எதிர்பார்த்ததுக்கு மாறாக கிரினரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 9 வருடச் சிறைத்தண்டனையை அவர் ஒரு சிறைச்சாலை முகாமில் கழிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிரினரின் தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி உடனடியாகக் கண்டித்தார். தனது ராஜதந்திரிகள் கிரினரை விடுதலை செய்வதற்காக ரஷ்ய அதிகாரிகள் மட்டத்தில் இடைவிடாமல் முயற்சி செய்து வருவதாகவும் இதுவரை தாம் எதிர்பார்க்கும் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
ரஷ்ய அரசின் பேச்சாளர் கிரினரின் மேன்முறையீட்டைப் பற்றி எதையும் சொல்ல மறுத்துவிட்டார். தத்தம் நாடுகளிலிருக்கும் மற்ற நாட்டின் சிறைக்கைதிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரகசியமாகவே நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்