மரணமடைந்த ஸுலு அரசன் தனக்கான கட்டணத்தைத் தராததால் புதிய அரசனின் சிம்மாசனத்தை செய்ய மறுக்கும் இந்தியத் தச்சன்.
ஸுலு அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றாலும் அவர் தனக்காகச் செய்ய உத்தரவு கொடுத்த இரண்டு சிம்மாசனங்களைச் செய்ய அவரது தச்சன் தயாராக இல்லை. காரணம் முன்னாள் அரசனும் காவேலிதினியின் தந்தையுமான குட்வில் ஸ்வேலிதினி தனக்குத் தரவேண்டிய கட்டணத்தை இன்னும் அரச குடும்பத்தினர் தரவில்லை என்பதாகும்.
ஸுலு அரச குடும்பத்துக்கான பிரத்தியேக தளபாடங்களைப் பாரம்பரிய அழகுடன் செய்து கொடுத்து வருபவர் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியப் பின்னணியைக் கொண்ட ராஜிவ் சிங் என்பவராகும். அதை அவர் அரிதாகக் கிடைக்கும், விலையுயர்ந்தTambootie மரத்திலிருந்து செய்துகொடுப்பவர். ஆபிரிக்காவின் உயர்மட்டத்தினரிடையே அந்த மரத்தின் தளபாடங்கள் பிரசித்தி பெற்றவை.
ராஜிவ் சிங்க் குறிப்பிட்ட மரத்தினால் குட்வில் ஸ்வேலிதினிக்குச் செய்துகொடுத்த தளபாடங்களுக்கான நிலுவை சுமார் அரை லட்சம் இந்திய ரூபாயாகும். ஏழு வருடங்களுக்கு முன்னர் செய்துகொடுத்த தளபாடங்களுக்கான கட்டணத்தைத் தராததால் தான் புதிய அரசரின் குடும்பம் கேட்டுக்கொண்ட சிம்மாசனங்கள் இரண்டை இன்னும் வடிவமைக்க ஆரம்பிக்கவில்லை என்கிறார் ராஜிவ் சிங்.
ராஜிவ் சிங்கின் தந்தையான கூபர் ஏடெவ் சிங்கும் குறிப்பிட்ட விலையுயர்ந்த மரத்தினால் தளபாடங்களை வடிவமைத்துக் கொடுப்பதில் உலகப் பிரசித்தி பெற்றவராக இருந்தார்.80 வயதுக்கும் அதிகமான அவரது கைவண்ணத்தில் செய்யப்பட்ட தளபாடங்கள் பிரிட்டிஷ் அரச குடும்பம் உட்பட உலகப் பிரசித்தி பெற்ற பலரின் வீடுகளிலும் இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்