பதினேழு ரூபாய்களைக் கொடுத்து மரணத்தை விலைக்கு வாங்கினார்கள் மோர்பி பாலத்தில்.

ஞாயிற்றுக்கிழமையன்று குஜராத்தில் இருக்கும் பிரபல மோர்பி பாலத்தில் நடந்த விபத்து பற்றிய விபரங்கள் பல வெளியாகி ஆச்சரியத்தையும், கோபத்தையும் மக்களிடையே உண்டாக்கி வருகின்றன. ஒரேவா என்ற நிறுவனம் அந்தப் பாலத்தைப் பராமரிப்பதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது. வருமானத்தை உயர்த்துவதற்காக அவர்கள் கட்டுப்பாடுகள் பலவற்றைத் துச்சமாக வந்ததாகத் தெரியவருகிறது.

ஏழு மாதங்களாக மோர்பி பாலம் புனருத்தாரண வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் மாநகர சபையின் அனுமதியின்றியே அது திறக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்துடன் சுமார் 200 பேருக்கும் குறைவானவர்களையே தாங்கக்கூடிய அந்தப் பாலத்தில் 17 ரூபாய்க்கான கட்டணத்துடன் சுமார் 650 பேர் குறிப்பிட்ட சமயத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

“குறிப்பிட்ட பாலம் நடக்கும்போது ஆடிக்கொண்டே இருக்கும், பலவீனமானதாகத் தெரியும். அப்படியிருந்தும் அதைக் கடக்கும்போது இளவட்டங்கள் அதை ஆட்டி அதில் நடப்பவர்களைப் பயப்படுத்துவது வழக்கம்,” என்றும் அன்று அதில் நடந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்து விட்டது. சுமார் 100 பேரை இன்னும் காணவில்லை. மீட்புப் படையினர் தொடர்ந்தும் நீருக்கு அடியிலிருந்து பிணங்களைத் தேடியெடுத்து வருகிறார்கள். 

பாலத்தின் விபத்துக்குக் காரணமானவர்கள் என்று 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலத்தை நிர்வாகம் செய்யும் நிறுவனம், அதில் வேலை செய்பவர்கள் அதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. மாநகர சபையே பாலத்தைக் கட்டி நிர்வகிப்பது வழக்கம். அதன் முக்கியத்துவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை, மா நகர சபை மீது ஏன் வழக்குத் தொடரவில்லை? என்று குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *