அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குள்ளாலான லெபனான் ஜனாதிபதியும் இல்லாத நாடாகிறது.
பெய்ரூட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஞாயிறன்றே வெளியேறினார் லெபனான் ஜனாதிபதி மைக்கல் ஔன். திங்களன்று நிறைவுபெறும் தனது ஜனாதிபதிப் பதவி காலியாக இருக்கும்போதே வெளியேறிய ஔனை வாசலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்றார்கள். நாட்டு மக்களின் ஒரு சாராரால் பெரிதும் விரும்பப்படும் 89 வயதான ஔன் விட்டுப்போகும் இடத்தை நிரப்புவது மிகக் கடுமையானது என்கிறார்கள் மத்திய கிழக்கு அரசியல் அவதானிகள்.
சில வருடங்களாகவே அரசியல் சுழியில் மாட்டுப்பட்டிருக்கும் லெபனானில் இவ்வருட முதல் பாகத்தில் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் எந்த ஒரு அணியினரும் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. ஜனாதிபதி பதவியை ஏற்கக்கூடிய எவரையும் பெரும்பான்மையினர் ஆதரிக்கவில்லை. மதங்கள் அதன் பிரிவுகள் ஆகியவற்றினால் பிளவுபட்ட நாடு லெபனான். அந்தந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் தமது பிரிவுகளின் அரசியல்வாதிகள் லஞ்ச ஊழலால் நாட்டைக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்று தெரிந்துகொண்டே அவர்களுக்கு வாக்களித்தனர்.
“காலையில் நான் ஒரு கடிதம் மூலம்நாட்டின் அரசாங்கம் பதவி விலகிவிட்டதாக பாராளுமன்றத்துக்குத் தெரிவித்திருக்கிறேன்,” என்ற்கு ஔன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை அமைத்ததாகக் குறிப்பிடும் கட்சியின் பிரதமரான நஜீப் மிக்கத்திக்கும், பதவி விலகும் ஜனாதிபதிக்கும் இடையே இழுபறி நிலவுவதே அரசியல் ஸ்தம்பிதத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
தனது மருமகனான கப்ரான் பசில் தனக்குப் பின்னர் ஜனாதிபதியாக வேண்டும் என்பது ஔனின் விருப்பமாகும். பசில் லெபனான் கிறிஸ்தவக் கட்சியான Free Patriotic Movement இன் தலைவராகும். கிறீஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் அதிகாரச் சமபலம் இருக்கவேண்டும் என்று செயற்படும் லெபனானில் ஜனாதிபதியாக ஒரு கிறீஸ்தவரும், பிரதமராக ஒரு சுன்னி முஸ்லீமும் தான் வரமுடியும்.
அரசாங்கம் பதவி விலகினாலும் பெரும் பணக்காரரான நஜீப் மிக்கத்தியே தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகத் தனது சக அமைச்சர்களுடன் தொடருவார். ஆனால், ஒரு இடைக்கால அரசாங்கள் நாட்டை வழக்கமான அதிகாரங்களுடன் இயக்க முடியாது. லெபனானோ மிகப்பெரும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளால் நீண்ட காலமாமவே ஒழுங்காக இயங்காமலிருக்கிறது. நாட்டின் நாணயத்தின் பெறுமதி காற்றில் ஆடும் காய்ந்த இலையாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்