உதைபந்தாட்ட ரசிகர்களுக்குச் சகலமும் இலவசமாகக் கொடுத்து, உளவு பார்க்கச் சொல்லும் கத்தார்.
விரைவில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தில் உலகக்கிண்ண மோதல்கள் உலகின் கவனத்தைக் கத்தார் மீது திருப்பவிருக்கின்றது. ஏற்கனவே கத்தார் பலவித எதிர்மறையான விமர்சனங்களைத் தாங்கி வருகிறது. முடிந்தவரை தமக்கு ஆதரவான விமர்சனங்களையும் உலகில் எதிரொலிக்கச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது கத்தார் அரசு.
தமக்கு ஆதரவான விமர்சனங்களைப் பொழிவதற்காகவும், சமூகவலைத் தளங்களில் வெளியாகும் எதிர்மறை விமர்சனங்களைத் தேடிப்பிடித்து எதிர்க்கவும் உதைபந்தாட்ட விசிறிகள் சிலரைப் பொறுக்கியெடுத்திருக்கிறது கத்தார். நெதர்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 50 பேரும் கத்தாருக்குப் பயணம் செய்ய, தங்குதல் உட்பட சகல செலவுகளையும் கத்தார் அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. பதிலாக அவர்கள் கத்தார் மீதான நல்ல விமர்சனங்களை உண்டாக்க வேண்டும்.
எவுட் கெர்வல், லெயோன் வான் டெர் வில்க்[Ewoud Kervel, Leon van der Wilk[ ஆகிய இரண்டு பிரபல நெதர்லாந்து உதைபந்தாட்ட ரசிகர்கள் கத்தாரின் நற்பெயரைப் பரப்பும் 50 பேரைத் தெரிந்தெடுக்க நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் கத்தார் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி ஓரேஞ்ச் நிற உடையணிந்து தமது நாட்டின் ரசிகர்களாக கத்தாரில் நடக்கும் முதலாவது மோதல் முதல் சகலத்திலும் பங்குபற்ற வேண்டும். அவர்கள் கத்தாருக்கு நற்பெயர் தரும் செய்திகளைச் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களும் பரப்பவேண்டும், எதிர்மறை விமர்சனங்களை அடையாளம் கண்டு நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்