சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் மாநாட்டில் 45 விவசாய அமைச்சர்கள் சந்திப்பு!

உலகின் 45 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் [OECD]] மாநாட்டில் சந்தித்துக்கொண்டன. பாரிஸில் நவம்பர் 3-4 ம் திகதிகளில் நடந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்ப்பட்ட  விடயம் உலக நாடுகளின் விவசாயம், உணவுத்தேவை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் தொந்தரவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதாகும்.

கொவிட் -19 தொற்றுநோய் பரவலானது நிலைமையை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து உக்ரேன் மீதான  ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலக நாடுகளுக்குப்  பொருளாதார இடைஞ்சல்களை ஏற்படுத்தியிருக்கிறது, அவற்றால்  உணவு விநியோக இடையூறுகள் ஏற்பட்டிருப்பதுடன் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான விலைகளும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

உலக மக்களின் உணவுத்தேவையை எதிர்வரும் காலத்தில் சூழலைப் பாதிக்காத விவசாயத்தின் மூலம் தீர்ப்பது எப்படி? 

ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனாவில் ஏற்பட்டிருக்கும் கடும் வரட்சியால் விவசாயத்துறை எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெல்வது எப்படி?

கடும் வறுமை, வரட்சி, பசி பட்டினி மற்றும் தேவையான ஊட்டச்சத்தின்றி வாடும், இறந்துபோகும் மில்லியன் கணக்கானோருக்கு உதவுவது எப்படி?

போன்ற கேள்விகள் விவசாயத்துறை அமைச்சர்களிடையே விவாதிக்கப்பட்டன.

விவாதங்களின் பின்னர் வரவிருக்கும் ஐந்து, ஆறு வருடங்களுக்கான விவசாயத்துறை, உணவு விநியோகம், பகிர்தல் பற்றிய தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். அந்தத் தீர்மானம் எகிப்தில் நடக்கவிருக்கும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுடன் சேர்த்துச் செயற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப் பயன்படுத்தப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *