கொசோவோவில் வாழும் செர்பியர்கள் தமது பொலீஸ் வேலையிலிருந்து விலகினார்கள்.
ஐரோப்பாவின் இளைய நாடான கொசோவோவில் வாழும் இனத்தவர்களுக்கு இடையேயான மனக்கசப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் வலுக்கின்றன. கொசோவோ அரசின் வாகனப்பதிவு அட்டைகளைத்தான் பாவிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொசோவோ நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதை எதிர்த்து அங்கே வாழும் செர்பியர்களில் பொலீசாராக இருந்தவர்கள் தமது பதவியிலிருந்து விலகினார்கள். மித்ரோவிட்சா நகரில் வாழ்பவர்களில் 300 பொலீசார் அக்காரணத்தினால் பதவி விலகினர்.
இதுவரை கொசோவோவில் வாழும் செர்பியர்கள் பக்கத்து நாடான செர்பியாவின் வாகனப்பதிவு அட்டைகளைப் பாவிப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கொசோவோவுக்குள் வாழ்பவர்கள் செர்பர்களாக இருப்பினும் தமது வாகனங்களைக் கொசோவோச் சின்னத்துடனான வாகன அட்டைகளைத்தான் கொண்டிருக்கவேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது.
அதை எதிர்த்து வரும் செர்பர்கள் ஞாயின்றன்று கொசோவோவில் தமது அரச பதவிகளைத் துறந்துவிட ஆரம்பித்திருக்கிறார்கள். நீதிபதிகள், நகர, அரச ஊழியர்கள் தமது பதவிகளிலிருந்து விலகிவருகிறார்கள்.
பக்கத்து நாடான செர்பியாவே இந்தப் பிரச்சினையைத் தூண்டி வருகிறதென்று குற்றஞ்சாட்டுகிறது கொசோவோ அரசு. கொசோவோவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தபோதும் செர்பியா அதை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இரண்டு சாராருக்கும் இடையே சர்ச்சைகள் வலுத்து ஒரு போராக மாறிவிடாமலிருக்க ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகிய அமைப்புகளால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகிறது. கொசோவோ-செர்பர்கள் பதவிகளிலிருந்து விலகுவது இதற்கான தீர்வல்ல அது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என்று எச்சரிக்கிறார் ஒன்றியத்தின் தலைவர்.
சாள்ஸ் ஜெ. போமன்