அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவும், அமெரிக்காவும் திட்டம்.
உக்ரேன் எல்லைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைந்தது முதல் அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் எதையும் ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக நடத்த மறுத்து வருவது தெரிந்ததே. ஆயினும், தத்தம்மிடமிருக்கும் அணு ஆயுதங்களைக் குறைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க இரு தரப்பாரும் விரும்புவதாகவும் அதைப்பற்றி யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
வழக்கமாக சுவிஸில் நடக்கும் அந்தப் பேச்சுவார்த்தைகள் மத்திய கிழக்கு நாடொன்றில் நடக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. அணியெதிலும் சேராமல் செயற்படுவதாகக் குறிப்பிடும் சுவிஸ் மேற்கு நாடுகள் போலவே ரஷ்யாவின் மீது முடக்கங்களைப் போட்டிருப்பதால் அங்கே பேச்சுவார்த்தைகளைத் தொடர ரஷ்யா விரும்பவில்லை.
புதிய ஆரம்பம் [The Strategic Arms Reduction Treaty] என்று குறிப்பிடப்படும் அந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு தரப்பாரும் எதிர்த்தரப்பாரின் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இடங்களுக்குச் சென்று நேரடியாக கண்காணிப்புச் செய்வதுண்டு. ரஷ்யா மீதான முடக்கங்கள், ரஷ்யாவுக்கு வான்வெளித்தடை ஆகியவை காரணமாக அமெரிக்காவுக்குள் நுழையத் தம்மால் முடியாது என்று குறிப்பிட்டு ரஷ்யா அவ்வொப்பந்தத்தில் இருந்து ஒதுங்கியிருந்தது.
அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவுக்குத் தனது ஆராய்வாளர்களை அனுப்பிக் கண்காணிப்பை ஆரம்பிக்கலாம். பனிப்போரின் இந்த இரண்டு தரப்பாரும் உக்ரேன் ஆக்கிரமிப்புக் காரணமாக வேறெந்த விடயத்திலும் கூட்டுறவுக்குத் தயாராக இல்லாத பட்சத்திலும் “புதிய ஆரம்பம்” ஒப்பந்தத்தைப் பேணத் தயாராக இருக்கிறார்கள்.
பெப்ரவரி 2026 வரைக்குள் தம்மிடமிருக்கும் பாவிக்கக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,550 ஆகக் குறைப்பதற்கான சம்மதம் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்