ஹொலிவூட் சினிமா, ஓபரா, பல்லாயிரக்கணக்கான செய்திகளுக்குக் காரணமான மெஹ்ரான் நஸரி மரணமடைந்தார்.

ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரீமி நஸரி பல கலைப்படைப்புகளால் உலகப் புகழ் பெற்றவராயினும் தன்னளவில் ஒரு அவலமான வாழ்க்கையைக் கடக்கவேண்டியதாயிற்று. டொம் ஹாங்க்ஸ் நடித்துச் சினிமாவாக்கிய The Terminal கதையின் கரு நஸரி பற்றியதே. அவர் பாரிஸ் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்தில் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டதால் Terminal 2F இல் தங்கியிருந்த அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டும் இறந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரம் தெரிவிக்கிறது.

2004 இல் வெளியானThe Terminal சினிமாவில் விக்டர் நவோர்ஷ்கி என்ற கதாபாத்திரம் தனது பயணத்தில் ஜோன் எப் கென்னடி விமான நிலையத்துக்கு அங்கே மாட்டிக்கொள்கிறார். காரணம் அவரது [கற்பனை நாடு]கிரகோசியாவில் இராணுவம் ஆட்சியைப் பிடித்துவிட்டது. அதனால் நவோர்ஷ்கி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, சொந்த நாட்டுக்குப் போகவும் கைகளில் அதற்கான பத்திரங்கள் இல்லை. 

ஈரானியத் தந்தைக்கும், பிரிட்டிஷ் தாய்க்கும் மகனான கரீம் நஸரி 1945 இல் ஈரான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது பிறந்தவர். 1974 இல் பிரிட்டனில் படித்துவிட்டுத் திரும்பும்போது அவர் ஈரானில் கைது செய்யப்பட்டார் தனது அரசியல் எதிர்ப்புக்களுக்காக. சிறைக்காலம் முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

விளைவாக 1988 இல் அவர் லண்டனை நோக்கி விமானத்தில் புறப்பட்ட லண்டன் அவரைத் திருப்பிப் பாரிஸுக்கு அனுப்பியது. அங்கே வெளியேற எந்தப் பத்திரங்களும் இல்லாததால் அவர் கைது செய்யப்பட்டு விமான நிலையத்திலேயே தங்கவேண்டியதாயிற்று. எந்த நாடும் அவருக்கு இடமளிக்காத நிலையில் நஸரி, சார்ள்ஸ் டி கோல் விமான நிலையப் பிரயாணிகள் மண்டபம் ஒன்றில் வாழ ஆரம்பித்தார்.

விமான நிலையத்தினுள் இருக்கும் சாய்விருக்கைகளில் தனக்கான தங்குமிடமொன்றை உருவாக்கிக்கொண்டு, பிளாஸ்டிக், காகித மட்டைகள் போன்றவற்றால் தனக்கு முடிந்தளவு வசதிகளை அவர் ஏற்படுத்திக்கொண்டு 1999 ம் ஆண்டுவரை எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தார் நஸரி. 

வெளியுலகு, சூரிய வெளிச்சம் ஏதுமில்லாமல் வசித்த நஸரிக்கு ஒரு வழியாக பிரான்ஸ் அகதி அந்தஸ்தைக் கொடுத்தது. ஆனால், மனக்குழப்பங்களால் எதையும் நம்பான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நஸரி விமான நிலையத்தை விட்டு வெளியேற மறுத்தார், தனக்கு அகதித்துவம் கிடைத்த பத்திரங்களை ஏற்றுக்கொள்ளவுமில்லை. 2006 வரை தொடர்ந்தும் விமான நிலையத்திலேயே வாழ்ந்த அவர் நோய்வாய்ப்பட்டதால் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

சில காலம் வெளியே வாழ்ந்த நஸரி சமீப காலத்தில் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பி வந்து வாழ ஆரம்பித்துவிட்டார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தார். இறக்கும் வரையில் அவர் அங்கேயே வாழ்ந்திருந்தார்.

Lost In Transit என்ற பிரெஞ்ச் நாடகம், Flight என்ற பெயரிலான பிரென்ச் ஓபரா, கதைகள், பல்லாயிரக்கணக்கான செய்திகள், கட்டுரைகள் நஸரியின் வாழ்வின் அவலத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *