இஸ்தான்புல் கடைவீதியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நடுவே குண்டு வெடித்த பெண்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரின் பிரபல கடை வீதியில் பல்லாயிரக்கணக்கானோரின் நடுவே குண்டு வெடித்தது. ஒரு பெண் தன்னுடன் கொண்டுவந்திருந்த பைக்குள் இருந்த குண்டை வாங்கு ஒன்றில் வைத்துவிட்டுப் போக அது வெடித்து இறந்ததாகக் குறிப்பிடப்படும் அந்த நிகழ்ச்சியில் 6 பேர் இறந்திருப்பதாகவும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டதாகவும் துருக்கியச் செய்திகள் தெரிவிக்கின்றன
கலகலப்பாக இருந்த அந்தக் கடைவீதி சுற்றுலாப் பயணிகளிடையேயும் பிரபலமானது. குண்டு வெடித்த தருணம் உட்பட அதைத் தொடர்ந்தவையும் பலரால் படமாக்கப்பட்டன. அவை உடனடியாகச் சமூகவலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் பரவின. அத்துடன் வதந்திகளும் பரவாமல் தடுப்பதற்காக தொலைத்தொடர்புகள் அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
குண்டுவெடிப்புக்குக் காரணகர்த்தாக்கள் யாரென்பதையும், அது ஒரு தீவிரவாதத் தாக்குதலா என்பதையும் பற்றிய விபரங்கள் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்டன. துருக்கியின் உதவி ஜனாதிபதி புவாத் ஒக்தாய் மூலம் அது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டது. குண்டு வைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டித்தே தீருவது என்று ஜனாதிபதி எர்டகான் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
பொது இடங்களில் குண்டு வெடிப்பது நீண்ட காலமாகத் துருக்கியில் நடக்கவில்லை என்பதால் ஞாயிறன்று நடந்த தாக்குதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 2015 – 2017 காலகட்டத்தில் துருக்கியின் பல பாகங்களிலும் குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. அத்தாக்குதல்களில் மொத்தமாக 500 பேருக்கும் அதிகமானோர் இறந்ததாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
துருக்கியின் ஒரு பகுதியைத் தமதென்று கோரும் குர்தீஷ் இனத்தவரின் ஆயுதப் போராளிகளே பெரும்பாலான தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள். ஐந்தாறு குழுக்களாக துருக்கிய அரசைக் குறிவைத்தும், தங்களுக்கிடையேயும் போரிட்டு வருகிறார்கள் குர்தீஷ் போராளிகள். துருக்கிய அரசு அவர்கள் மீது இரும்புக்கரத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்