அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க – ரஷ்ய உளவுத்துறை நிர்வாகிகள்.
அமெரிக்கச் சர்வதேச உளவுத்துறையான சி.ஐ.ஏ- யின் தலைமை நிர்வாகி வில்லியம் பேர்ன்ஸ் துருக்கியின் தலைநகரான அங்காராவுக்கு திங்களன்று வந்திருக்கிறார். அதே சமயத்தில் அங்கே வருகை தந்த இன்னொரு புள்ளி ரஷ்யாவின் உளவுத்துறைத் தலைமை நிர்வாகி செர்கெய் நரிஷ்கின் ஆகும். இருவரும் சந்தித்து உரையாடியதாக ரஷ்யாவின் செய்தித்துறை தெரிவித்திருக்கிறது.
அந்த இரண்டு முக்கிய புள்ளிகளின் சந்திப்புக்குக் காரணம் உக்ரேன் போரில் சமாதானம் எதுவும் ஏற்படுத்துவது அல்ல என்று அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பதிலாக அவர்களிருவரும் இரண்டு நாடுகளின் கைவசமிருக்கும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் அணு ஆயுதங்களைக் கையாள்வது பற்றிக் கலந்துரையாடியதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான கருவை அமெரிக்காவே விதைத்ததாகவும் ரஷ்ய தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
அணு ஆயுதங்கள் தவிர அவ்விருவரும் கலந்தாலோசித்த இன்னொரு விடயம் ரஷ்யாவில் வேண்டுமென்ற தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் பற்றியதாகும். உக்ரேன் போர் அல்லது சமாதானம் பற்றிய எந்தப் பேச்சுவார்த்தைகளையும் உக்ரேன் சமூகமளிக்காமல் தாம் நடத்தத் தயாராக இல்லை என்றும் அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அங்காராவில் நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றி ஜி 20 நாடுகளின் மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் ஐ.நா -வின் பொதுக் காரியதரிசியான அந்தோனியோ குத்தேரஸிடம் பத்திரிகையாளர்கள் வினாவெழுப்பினார்கள். அது பற்றிய விபரங்கள் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட குத்தேரஸ் அவ்விரு தரப்பாரும் சந்தித்துக் கலந்தாலோசிப்பது நல்லதே என்று மட்டும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்