ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறது இந்திய அரசு.
கடந்த வார இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தம்மிடம் கலந்தாலோசிக்காமல் விடுதலை செய்ததில் அதிருப்தி அடைந்திருக்கிறது இந்திய அரசு.
“விடுதலை செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் இலங்கைப் பிரஜைகள் என்பதை இங்கு குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. எமது நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற கொடூரமான குற்றத்திற்காக சட்டவரையறைக்கு உட்பட்டு முறையாகத் தண்டிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தேசத்தின் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒரு விடயமாகும். எனவே அது இந்திய அரசின் இறையாண்மைக்கு உட்பட்டது,” என்று உச்ச நீதிமன்றத்திடம் அந்த அறுவரையும் விடுதலை செய்தது பற்றிய மீளாய்வுக் கோரிக்கையில் இந்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
எஸ்.நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சாந்தன், முருகன் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்யும்படி அப்போதைய தமிழக அரசு 2018 இல் மாநில ஆளுனருக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆளுனரோ அதற்கான கருத்துக்களைப் பற்றிய முடிவெடுக்காமல் இரண்டரை வருடங்கள் ஒத்திப் போட்டிருந்தார். பின்னர் அந்தப் பரிந்துரை பற்றிய முடிவை எடுக்கும்படி 2021 ஜனவரியில் நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.
ஜனாதிபதியிடம் அந்தப் பரிந்துரை முடிவெடுக்கப்படாமல் சுமார் ஒரு வருடம் ஒன்பது மாதங்களாகக் காத்திருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளின் நன்னடத்தை, அவர்கள் சிறையிலிருந்து கற்றுக்கொண்டவை ஆகியவைகளைச் சுட்டிக்காட்டி விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தது.
உச்ச நீதிமன்ற அக்குற்றவாளிகளை விடுதலை செய்வதாக முடிவெடுத்தபோது சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை, அரசுடன் அதுபற்றிய கலந்தாலோசனையைச் செய்யத் தவறிவிட்டது ஆகியவை இந்திய மத்திய அரசினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
“நீதிமன்றம் சட்ட ஒழுங்குமுறையைச் சரியாகப் பின்றற்றாத இந்த விவகாரம் பொது ஒழுங்கு, அமைதி, அமைதி மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உச்ச நீதிமன்ற எடுத்த முடிவினால் நீதி வழுவாமல் தடுக்க இவ்விடத்தில் இந்திய அரசு குறுக்கிடுவது அத்தியாவசியமானது,” என்கிறது அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்