தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாட வியாழனன்று அதிகாலை கத்தாரில் வந்திறங்கினார் லயனல் மெஸ்ஸி.

நவம்பர் 20 ம் திகதி கத்தார் 2022 உலகக் கோப்பைத் திருவிழாஅ ஆரம்பிக்கவிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்லும் கடைசி முயற்சியை அங்கே செய்ய வந்திறங்கிய 35 வயதான லயனல் மெஸ்ஸியையும் அவரது ஆர்ஜென்ரீனா தேசியக் குழுவினரையும் சுமார் ஐநூறு பேர் விமான நிலையத்தின் வெளியே ஆட்டம், பாட்டுகளுடன் வரவேற்றார்கள். அவர்களில் பாதிப்பேர் ஆர்ஜென்ரீன விசிறிகள், மீதிப்பேரோ இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களாகும்.

கத்தாரில் இறங்க முதல் தமது அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் மோதலொன்றை அபுதாபியில் எமிரேட்ஸ் குழுவினருடன் விளையாடிவிட்டு வந்திருக்கிறார்கள் ஆர்ஜென்ரீனியர்கள். 5 – 0 என்ற எண்ணிக்கையில் எமிரேட்ஸை வென்றபோது மெஸ்ஸி தனது 91 வது சர்வதேச கோலைப் போட்டு விசிறிகளைத் திருப்திப்படுத்தினார். மெஸ்ஸியின் கத்தார் விசிறி கழகத்தின் அங்கத்துவர்கள் 5,000 க்கும் அதிகமென்று குறிப்பிடப்படுகிறது.

உலகக் கோப்பையை இதுவரை இரண்டு தடவைகள் ஆர்ஜென்ரீனா வென்றிருக்கிறது. அவை 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலாகும். 1978 இல் பஸரல்லாவின் தலைமையிலும்1986 இல் மரடோனாவின் தலைமையிலும் அவர்கள் கோப்பையை வென்றார்கள். 

இவ்வருடம் அந்தக் குழுவின் தலைமையைத் தாங்குபவர் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரென்று கருதப்படும் லயனல் மெஸ்ஸியாகும். 2018 லும் அக்குழுவுக்குத் தலைமை தாங்கிய அவரால் மரடோனாவைப் போலக் கோப்பையை வென்றெடுக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தை நிறைவேற்ற இந்த முறை அவர் அதை வெற்றிபெற்றுத் தனது விளையாட்டின் உச்சநிலையை அடையவேண்டுமென்று அவரது விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *