தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டிருப்பதாக துருக்கி அறிவிப்பு.
நான்கு பகுதியினர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருங்கடல் மூலமாக உக்ரேன் கப்பல்களில் தானியத்தை ஏற்றுமதி செய்வதை மேலும் நீடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக எர்டகான் தெரிவித்தார். பாலியில் ஜி 20 மாநாட்டிலிருந்து நாடு திரும்பும்போது அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஐ.நா, அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நான்கு பகுதியினருடனும் துருக்கி நடுவராக இருந்து அந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்ததாகத் தெரிவித்த துருக்கிய ஜனாதிபதி எர்டகான் பங்குபற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 11 மில்லியன் தொன் தானியவகை மிகப் பெரும் பயனளித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
உணவுப்பொருட்களின் விலையேற்றமும், தட்டுப்பாடும் மேலும் மோசமாகியிருக்கும் இந்த நிலைமையில் ஆபிரிக்காவின் வறிய நாடுகளுக்கு இலவசமாக உணவுத் தானியங்களைக் கொடுக்க விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி புத்தின் முன்வந்ததைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். மாலி, ஜுபூத்தி, சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு இலவசமாகத் தானியங்கவகைகள் அனுப்ப ரஷ்யா முன்வந்திருக்கிறது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியாகியிருக்கும் அறிக்கையானது நவம்பர் 18 ம் திகதியின் பின்னர் 120 நாட்களுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் நீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்