பெண்களின் ஸ்டீவ் ஜொப் என்று போற்றப்பட்ட எலிசபெத் ஹோல்ம்ஸுக்கு மோசடிக்காக 11 வருடச் சிறைத்தண்டனை.
பத்தொன்பதாவது வயதில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே இரத்தத்துளியொன்றை மட்டும் வைத்து ஒருவருக்கு இருக்கும் 240 ஆரோக்கியக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்ததாகச் சொன்ன எலிசபெத் ஹோல்ம்ஸ் தெரானோஸ் [Theranos] என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்தார். தனது நிறுவனத்துக்கு முதலீடாகப் பல நூறு மில்லியன்களை முதலீடுகள் செய்யப் பலரையும் தூண்டினார். ஆனால், உண்மை பகிரங்கமாக்கப்பட்டபோது அத்தனை பேரும் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
முக்கிய அரசியல்வாதிகள் சிலர் உட்பட அமெரிக்காவின் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலவற்றைக் கொண்ட சிலிகொன் வலி பிராந்தியத்தின் பெரும் பணக்காரர்களும் ஹோல்ம்ஸால் ஏமாற்றப்பட்டார்கள். பிரபலங்களின் முதலீடுகளால் பங்குச் சந்தையிலும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருந்த தெரானோஸ் பங்குகளின் பெறுமதி ஒரு கட்டத்தில் ஒன்பது பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது.
நம்பவைத்து ஏமாற்றி மோசடி செய்தமைக்காக நீதிமன்றத்தில் எலிசபெத் ஹோல்ம்ஸுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஹோல்ம்ஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் அவருக்குச் சில மாதங்கள் வீட்டுக்காவல் தண்டனையை மட்டுமே கோரினார்கள். ஹோல்ம்ஸ் குற்றமற்றவர் என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்