வாக்கெடுப்பின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு.

பொய்ச்செய்திகள் பரப்பல், தனிநபர்களையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவாகப் பேசுதல் போன்றவற்றுக்காக மூடப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலொன் மஸ்க் அந்தச் செய்தியைச் சனிக்கிழமையன்று வெளியிட்டார். 

பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட டிரம்ப்பின் டுவிட்டர் அங்கத்துவம் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் புகுந்து வன்முறையில் இறங்கியதையடுத்து முடக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் அவர் வாழ்ந்த சமயத்தில் அவர் அந்தச் சமூகவலைத்தளம் மூலமாகவே தனது ஆதரவாளர்களுடன் பெருமளவில் தொடர்பு கொண்டுவந்தார். 88 மில்லியன் பேர் அவரது டுவிட்டர் சந்தாதாரர்களாக இருந்தார்கள். தான் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகக் களத்தில் குதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்த ஒரு சில நாட்களையடுத்து அந்தத் தொடர்பு சாதனம் அவரிடம் மீண்டும் கிடைத்திருக்கிறது.

டுவிட்டர் அங்கத்தினர்களிடையே டிரம்ப்பை மீண்டும் தனது கணக்கைப் பாவிக்க அனுமதிக்கலாமா என்று எலொன் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். அவர்களில் 58 விகிதமானவர்கள் ஆதரவாகவே வாக்களித்தனர். டிரம்ப்பின் கணக்கு மீண்டும் திறக்கப்பட்டிருப்பினும்கூட அவர் அதை இன்னும் பாவிக்கவில்லை. அதைப் பாவிக்கும் எண்ணம் தனக்கு இல்லையென்று அவர் தெரிவித்தார். 

எலொன் மஸ்க் பொறுப்பை எடுத்து டுவிட்டர் நிறுவனத்துக்குள் தனது சட்டங்களை நிறைவேற்ற ஆரம்பத்ததிலிருந்தே டுவிட்டரின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் பலர் வேலையை விட்டு விலகினார்கள். அவர்களின் முக்கிய நிர்வாகிகளை எலொன் மஸ்க் நிறுவனம் தன் கையில் கிடைத்த முதல் நாட்களிலேயே நீக்கிவிட்டிருந்தார். டுவிட்டர் நிறுவனத்தில் விளம்பரம் செய்துவந்த பிரபல நிறுவனங்கள் பலவும் கூட அதனுடன் தமது தொடர்பை முறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மஸ்க் மீது அவரது ஊழியர்கள் பலரும் பகிரங்கமான விமர்சனக் கணைகளை வீசிக்கொண்டிருந்தார்கள். அவற்றை நிறுத்த 17 ம் திகதி வியாழக்கிழமை மாலை வரை கெடு கொடுத்து, “உங்களுக்கு இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாகம், ஒழுங்குகள் பிடிக்கவில்லையானால் உடனடியாக விலகலாம்,” என்று செய்தியனுப்பினார் மஸ்க். விளைவாக நூற்றுக்கணக்கானோர் தமது வேலைகளைத் திறந்தார்கள். அதையடுத்து டுவிட்டர் நிறுவன அலுவலகங்களைத் திங்களன்றுவரை பூட்டிவிட்டிருக்கிறார் மஸ்க்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *