தமிழர் வாழும் தேசமெங்கும் துவங்கியுள்ள மாவீரர் வாரம்
தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் வார நினைவுநாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்கான விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதத்தில் மாவீரர் வார நினைவு இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் தேசமெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாயகத்திலும் புலத்திலும் வழமை போல மக்களால் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
குறிப்பாக தாயகத்தில் இராணுவ அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பல அமைப்பினராலும் மக்களாலும் மாவீரர் துயிலுமில்லப்பகுதிகள் துப்பரவு மற்றும் சிரமதானப் பணிகள் செய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்களால் வளாகத்திலுள்ள தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் துவங்கியுள்ளன.
அதேவேளை எதிர்வரும் கார்த்திகை 27 வரை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுத்தூபி வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் கட்டப்பட்டிருப்பதோடு தூபிப்பகுதியும் மாணவர்களால் வர்ணப்பூச்சு அடிக்கப்படிருக்கிறது.
அத்துடன் வடக்குக்கிழக்கின் ஏனைய பகுதிகளின் நகரங்களிலும் மக்களால் மாவீரர் வார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.