உலகக்கோப்பை இரண்டாம் நாள் மோதல்களில் எல்லோரும் வெற்றியை நாட ஈரான் வீரர்கள் தமது அரசின் மீதான வெறுப்பைக் காட்டினர்.
கத்தாரில் ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பை மோதல்களில் ரசிகர்கள் தமது ஆதர்ச வீரர்கள், நாடுகளின் விளையாட்டைக் கண்டு ரசிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் இதுவரை எந்த ஒரு உலகக்கோப்பைப் பந்தயங்களில் இல்லாத அளவுக்கு அரசியல் கோட்பாடுகளும் உதைக்கப்படுகின்றன. மனித உரிமைகள் பற்றிய விவாதங்கள் அரசியல் தலைவர்களுக்கும், விளையாட்டுத் தலைவர்களுக்குமிடையே சரமாரியாக வீசப்பட்டு வருகின்றன.
இரண்டாவது நாளின் முதலாவது மோதலில் இங்கிலாந்து 6 – 2 என்ற வித்தியாசத்தில் ஈரானை வெற்றிகொண்டது. மோதலின் ஆரம்பத்தில் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டபோது ஈரானின் விளையாட்டு வீரர்கள் அதைப் பாட மறுத்துத் தமது அரசியல் நிலைப்பாட்டைக் காட்டி உலகம் முழுவதற்கும் ஈரானில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தமது ஆதரவை மௌனத்தால் தெரிவித்தனர்.
ஈரான் முதல் பாதி விளையாட்டிலேயே 4-0 என்ற வித்தியாசத்தில் தோற்றிருந்தது. இங்கிலாந்தை ஆதரிப்பவர்கள் அதைப் பெருமளவில் கொண்டாடிய சமயத்தில் ஈரானிலும், வெளிநாட்டிலும் வாழும் ஈரானியர்கள் பலர் தமது நாட்டுக்கெதிராக கோல்கள் விழுந்தபோது அதைக் கொண்டாடினார்கள் என்று ஊடகங்கள் பல குறிப்பிடுகின்றன. காரணம் ஈரானிய ஆட்சியாளர்கள் உதைபந்தாட்ட வீரர்கள் வெல்வதைத் தமக்கு வெற்றி மாலைகளாக அணிந்துகொள்ளலாகாது என்பதாலேயே.
இங்கிலாந்தின் வீரர்களும் தமது அரசியல் நிலைப்பாட்டைக் காட்டினார்கள். அவர்களும் மற்ற நாட்டின் வீர்களும் கத்தாரில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுதல், பெண்களுக்குச் சம உரிமையின்மை, அன்னிய நாட்டுத் தொழிலாளர்களின் நிலைமை போன்றவற்றைக் கண்டிக்க ”One Love” என்ற கோஷம் கொண்ட பட்டியைத் தமது கைகளில் அணிந்திருக்கத் திட்டமிட்டிருந்தனர். கத்தார் அரசால் நெருக்கப்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியம் அதை வீரர்கள் அணிவதைத் தடைசெய்தது. அதைக் கண்டிக்கவே இங்கிலாந்து வீரர்கள் ஒரு காலில் முழங்காலிலிருந்து தமது எதிர்ப்பைக் காட்டினார்கள்.
திங்களன்று நடந்த இரண்டாவது மோதலில் நெதர்லாந்தும் செனகலும் மோதின. நெதர்லாந்து வீரர்களோ, பார்வையாளர்களோ பெரிதும் எதிர்பாராத திறமையையும், வேகத்தையும் தமது விளையாட்டில் காட்டினார்கள் செனகல் வீர்கள். மோதலின் கடைசிப் பத்து நிமிடங்கள் வரையும் செனகலின் வலைக்குள் பந்தைப் போட முடியாமல் திணறினார்கள் நெதர்லாந்து அணியினர். கடையில் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு 2 – 0 என்ற வித்தியாசத்தில் அவர்கள் செனகலை வீழ்த்தினர்.
மூன்றாவது மோதலில் ரசிகர்களுக்கு விறுவிறுப்பைக் காட்டினார்கள் அமெரிக்க – வேல்ஸ் அணிகள். முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்காவின் வீரர்கள் திறமையாக விளையாடி 1- 0 என்ற வித்தியாசத்தில் இருந்தனர். வேல்ஸ் அணியினர் இரண்டாம் பாதியில் தமது வேகத்தைச் சீர்செய்துகொண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு அணியை உடைக்கத் தொடங்கினார்கள். கடைசியில் 1 – 1 என்ற முடிவை அவர்கள் உண்டாக்கினார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்