சோமாலியாவின் குடிமக்களின் பாதிப்பேர் வரட்சி, பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆபிரிக்காவின் வறிய நாடுகளிலொன்றான மிக மோசமான பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனிதாபிமான உதவி அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. அங்கே வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் – எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் – அதனால் பாதிக்கப்பட்டு உதவி அமைப்புக்களின் உதவிகளின்றித் தப்பமுடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே நாட்டில் பருவமழை தவறி அல்லது குறைந்துவிட்டிருக்கிறது. வெப்பமான பகுதிகளில் வெம்மை மேலும் அதிகரித்திருக்கிறது. இவ்விரண்டும் சேர்ந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளை வரட்சிக்குக்கீழ் தள்ளியிருக்கின்றன. அத்துடன் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் உண்வுப்பொருட்களின் விலையுயர்வு, தட்டுப்பாடு ஆகியவையும் நாட்டைப் பாதித்திருக்கின்றன.
அரசியல் களத்திலும் கடந்த சில வருடங்களாக நிலையின்மையே நிலவி வருகிறது. ஆளுபவர் யாரென்ற குடுமிப்பிடிக்குள் வெவ்வேறு தரப்பார் ஈடுபட்டிருந்ததால் அரசாங்கம் செயற்படாமலே இருந்தது. அதேசமயம், இன்னொரு பக்கத்தில் அல் ஷபாப், அல் கைதா போன்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொண்டு மத்தியிலிருக்கும் ஆட்சியினருடன் மோதி வருகின்றன.
பஞ்சத்தாலும் வரட்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டின் எல்லையில் எத்தியோப்பியாவுக்கு அருகேயிருக்கும் பகுதிகளை நோக்கிப் புலம்பெயர்ந்திருக்கின்றன. அங்கே உதவி அமைப்புக்கள் தமது அகதிகள் முகாம்களை நிறுவி உணவு, மருந்து, சுகாதாரம் போன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த முகாம்களை நோக்கி மேலும் பலர் வந்துகொண்டிருப்பதால் தமக்கு மேலும் உதவும்படி ஐ.நா-வின் உணவு உதவியமைப்பை அவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்