ரஷ்ய எரிபொருளை வாங்குவதற்கான உச்சவரம்பு திட்டம் டிசம்பர் 05 முதல் அமுலுக்கு வந்தது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயின் சர்வதேச வர்த்தகத்துக்கு, அமெரிக்கா மற்றும் கனடா விதித்த தடைக்கு பல மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையுடன், இந்த உச்சவிலை வரம்பும் நடைமுறைக்கு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் எரிபொருள் வாங்குவதை நிறுத்தும் முடிவெடுத்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் முற்றாக வெற்றியடையவில்லை. முன்னர் தமது தேவையில் 40 % எரிபொருளுக்கு ரஷ்யாவிலேயே தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அதை 10 % ஐயும் விடக் குறைவாகவே தற்போது வாங்குகின்றன. அதனால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை வைத்து ரஷ்யா அவ்விலையைக் கணிசமாக உயர்த்துவதைத் தடுக்கவே ரஷ்யாவிடமிருந்து வாங்குபவர்களுக்கான விலைக்கு உச்சவரம்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ளது. அவர்கள் தமது விலையைப் பாவித்து சந்தை விலையில் புதிய வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பது எளிது. ஐரோப்பிய ஒன்றியமும், ஆஸ்ரேலியாவும், ஜி 7 நாடுகளும் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த நடவடிக்கையின் அர்த்தம் பீப்பாய் ஒன்றுக்கு $60க்கு சமமான அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்கப்படும் எண்ணெய் மட்டுமே தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்பதாகும்.
ஐரோப்பிய ஒன்றியம், G7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள், அந்த விலைக்கு மேல் ரஷ்ய எண்ணெய் விற்கப்பட்டால் அதற்கான கடல்வழிப் போக்குவரத்துக்கான காப்புறுதிச் சேவைகளை வழங்க தடை விதிக்கப்படும். G7 நாடுகள் – கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா ஆகிய நாடுகளே உலகின் 90% சரக்குகளுக்கு காப்பீட்டு சேவைகளை வழங்குகின்றன மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடல் சரக்குகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் பொருட்களுக்கான கூடுதல் வரம்பு பிப்ரவரி 5 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது கச்சா எண்ணெய் விலைக்குப் போடப்பட்டிருக்கும் உச்சவிலை வரம்பு ரஷ்யாவிக் கொதிக்கவைத்திருக்கிறது. “எங்கள் எரிபொருளுக்கு நீங்கள் விலை வரம்பு போடுவதை அனுமதிக்க முடியாது. பதிலாக, நாம் உங்களுக்குக் கொடுக்கும் எரிவாயுவை நிறுத்திவிடுவோம்,” என்று எச்சரித்திருக்கிறது ரஷ்யா.
சாள்ஸ் ஜெ. போமன்