அமெரிக்க செனட் சபையின் 51 வது இடத்தை வென்றனர் டெமொகிரடிக் கட்சியினர்.
நவம்பர் மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத் தேர்தல்கள் டெமொகிரடிக் கட்சியினருக்குச் சாதகமாக முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் செண்ட் சபையில் இருந்த நிலைமையை விட, ஒரு இடத்தை அதிகமாகக் கைப்பற்றியிருக்கிறார்கள் ஜோ பைடன் கட்சியினர். ஜியோர்ஜியா மாநிலத்தில் நடந்த தேர்தலில் டெமொகிரடிக் கட்சியின் ரபாயேல் வார்னொக் வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் செனட் சபையில் 51 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் செனட் சபையின் 100 இடங்களில் 50 இடங்களை டெமொகிரடிக் கட்சியினர் 2020 தேர்தலில் பெற்றிருந்தார்கள். அதனால் அங்கே பெரும்பான்மை தேவையானபோதெல்லாம் உதவி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வாக்கை அளித்து 51 ஆக்கினால் மட்டுமே டெமொகிரடிக் கட்சியினரின் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜியோர்ஜியா மாநிலத்தின் வெற்றியானது டெமொடிரடிக் கட்சியினருக்கு உதவி ஜனாதிபதியின் வாக்கைப் பாவிக்காமலேயே 51 வாக்குகளைக் கொடுத்திருப்பதால், ஜோ பைடன் தனது திட்டங்களை வரவிருக்கும் இரண்டு வருடங்களில் செனட் சபையில் வெற்றிகொள்ள வாய்ப்பளிக்கும்.
ஜியோர்ஜியாவில் தோல்வியடைந்த ஹேர்ஷல் வோக்கர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான விளையாட்டு வீரராகும். அத்துடன் டொனால்ட் டிரம்ப்பால் பிரத்தியேகமாக ஆதரிக்கப்பட்டவர்களில் ஒருவர். வோக்கரின் தோல்வியானது ரிபப்ளிகன் கட்சியினரிடையே டிரம்ப்புக்கு இருக்கும் ஆதரவை மேலும் பலவீனப்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்