சிறைப்பறவை போரிஸ் பெக்கர் எட்டே மாதங்களில் விடுதலையாகித் தனி விமானமொன்றில் ஜேர்மனிக்குப் பறக்கவிருக்கிறார்.
ஜெர்மனியின் மிகப்பெரிய விளையாட்டு வீரர் என்று கருதப்படுபவர் போரிஸ் பெக்கர். இங்கிலாந்தில் 2017 இல் தனது கடன்களைக் கட்ட முடியாமல் நீதிமன்றத்தின் மூலம் திவாலானதாகப் பிரகடனம் செய்துகொண்டார். அச்சமயத்தில் அவர் பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததற்காக லண்டன் நீதிமன்றமொன்று அவருக்கு 2.5 வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அத்தண்டனையில் 8 மாதங்களைக் கழித்துவிட்ட அவருக்கு விரைவில் விடுதலை கொடுக்கப்படவிருக்கிறது.
சர்வதேசப் பிரசித்திபெற்ற பெக்கரின் விடுதலைக்குப் பின்னர் அவர் கொடுக்கவிருக்கும் முதலாவது செவ்வி மிகவும் விலைமதிப்பானது. அதற்காக ஒப்பந்தம் செய்திருக்கும் ஊடகமொன்று பெக்கர் விடுதலை பெற்றதும் அவரைத் தனி உல்லாச விமானமொன்றில் இங்கிலாந்திலிருந்து ஜேர்மனிக்குக் கொண்டுசெல்லவிருக்கிறது. சிறைவாசம் முடிந்தவுடன் அவரை வேறு ஊடகங்கள் கொத்திக்கொண்டு போகாமலிருக்கவே குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தால் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அரசின் சிறைச்சாலை நிர்வாகம் தமது செலவுகளைக் குறைக்கவும், சிறைச்சாலைகளின் இடமில்லாமையைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. “சிறையிலிருக்கும் வெளிநாட்டவரெவராவது நாட்டை விட்டு வெளியேற்றப்படச் சம்மதிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் சிறைத்தண்டனை முடிந்து வெளியேறும் காலத்திற்குப் பனிரெண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கலாம்,” என்பதே பிரிட்டனின் திட்டமாகும்.அதனாலேயே போரிஸ் பெக்கர் தனது தண்டனையில் ஒரு சிறுபகுதியை அனுபவித்தவுடன் விடுதலை செய்யப்படவிருக்கிறார். விடுதலை செய்யப்பட்டாலும் அவர் தனது மொத்தத் தண்டனைக்காலம் முடியமுதல் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்.
பெக்கர் ஜேர்மனியில் தான் பிறந்த ஊரான லெய்மானில் வாழும் தனது தாயாருடைய வீட்டுக்குத் திரும்புவார் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்