நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பெரு ஜனாதிபதி பதவியிறக்கம். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு.
தென்னமெரிக்க நாடான பெருவில் நீண்ட காலமாக நிலவிவந்த அரசியல் சிக்கல்கள் கடந்த நாட்களில் அதிரவைக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க்கிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் பதவி நீக்கப்பட்டார். உப ஜனாதிபதியாக இருந்த டீனா பூலார்ட்டே புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுப் பதவியேற்றார். நாடு சுதந்திரமடைந்த 200 ஆண்டுகளின் பின்னர் முதலாவது பெண் ஜனாதிபதி பெருவுக்குக் கிடைத்திருக்கிறார்.
2021 ஜூன் முதல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். இது அவர் மீது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும். பெரு நாட்டின் ஜனாதிபதிக்கு, பாராளுமன்றத்தைக் கலைக்கும் உரிமையுண்டு. பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதியை அகற்றும் உரிமையுண்டு.
2021 இல் கஸ்டில்லோவுடன் சேர்ந்து தேர்தலில் நின்று உப ஜனாதிபதியாக வெற்றி பெற்றவரே தற்போது ஜனாதிபதியாகியிருக்கும் டீனா பூலார்ட்டே [Dina Boluarte]. 60 வயதான பூலார்ட்டே ஒரு வழக்கறிஞராகும். அவர் பெருவின் பழங்குடியினத்தினரான குவேச்சுவா [quechua] இனத்தைச் சேர்ந்தவர். இதுவரை சமூக ஒன்றிணைப்பு, அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்.
பாராளுமன்றத்தைக் கலைக்க கஸ்டில்லோ கொடுத்த உத்தரவை நாட்டின் இராணுவமோ, உள்துறையோ ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா, ஆர்ஜென்ரீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் அரசுகளும் கஸ்டில்லோவின் அந்த நகர்வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. பொலீசார் கஸ்டில்லோவைக் கைது செய்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமீப வருடங்களில் ஏற்பட்டுவரும் சமூக மாறுதல்களால் உருவாகிவரும் மாற்றமாகக் கருதப்படும் இடதுசாரிகளுக்கான ஆதரவாக கஸ்டில்லோ ஜனாதிபதியாக வெற்றிபெற்றமை கணிக்கப்பட்டது. சாதாரண பாடசாலை ஆசிரியராக இருந்து தொழிலாளர் கட்சித் தலைவராக அரசியலுக்கு வந்தவர் கஸ்டில்லோ. தன் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொய்யென்கிறார் கஸ்டில்லோ. இதுவரை ஆட்சியிலிருந்த ஆளும் வர்க்கத்தினர் தமது காலத்தில் செய்த ஊழல்கள் வெளிவந்து தண்டிக்கப்படாமல் தப்பிக்கவே அப்படியான குற்றங்களைத் தன்மீது சாட்டுவதாக அவர் குறிப்பிட்டு வருகிறார்.
பொலீசாரால் தடுக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கஸ்டில்லோ நாட்டின் மெக்ஸிகோ தூதுவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் கஸ்டில்லோ மெக்ஸிகோவில் புகலிடம் கோரும் விண்ணப்பத்தைக் கொடுத்திருப்பதாக மெக்ஸிகோ வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்