கத்தார் அரசுடன் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சங்கள் வாங்கி ஊழல்கள் செய்ததாகக் கைது.
மற்றைய நாடுகளில் ஊழல் இருப்பதாக விமர்சித்துத் தண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே லஞ்ச ஊழல்களில் தோய்ந்திருந்ததாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டார்கள் என்று பெல்ஜியத்திலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கிரேக்க பாராளுமன்ற உறுப்பினரும், உப சபாநாயகருமான ஏவா கல்லி தான் கைதுசெய்யப்பட்டவர்.
ஏவா கல்லி உட்பட்ட வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அலுவலகர்கள் உட்பட 16 வீடுகளில் அதிரடியாக பொலீசார் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். கல்லியின் வீட்டிலிருந்து ஆறு லட்சம் எவ்ரோ கைப்பற்றப்பட்டது. அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரும் அடங்குவர். காவலில் தொடர்ந்தும் நால்வர் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல குற்றங்களைத் திட்டமிட்டுச் செய்ததுடன், லஞ்சம் வாங்கியது, கருப்புப் பணத்தைக் கையாண்டமை போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. கடந்த பல மாதங்களாகக் குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடொன்றின் அரசு மூலம் ஐ.ஒன்றியத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகளைப் பெற்று வந்திருக்கின்றனர். கைமாற்றாக குறிப்பிட்ட நாட்டுக்குச் சார்பான காரியங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கைதுசெய்யப்பட்டவர்களுக்கு லஞ்சங்கள் கொடுத்து ஊழல்களைச் செய்யத் தூண்டிய நாடு கத்தார் என்ற வதந்தி பலமாக அடிபட்டு வருகிறது. அதைக் கத்தார் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
கிரேக்க பா.உ -வின் சொத்துக்கள் அவரது நாட்டு அரசால் திங்களன்று கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. நடந்தவை பற்றி அறிந்து தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் ஒன்றியத்தின் பாராளுமன்றத்தின் நம்பிக்கை மீது தாக்குதல் நடந்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்