நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் உலகின் மிகவும் கடுமையான புகைத்தல் தடுப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது குடிமக்களில் 8 % புகைப்பவர்களைக் கொண்ட நியூசிலாந்து அதை 2025 இல் ஏறக்குறைய முழுசாக ஒழித்துக்கட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. அதற்கான படிகளில் ஒன்றாக 2023 இன் ஆரம்பத்தில் புதிய சட்டமொன்று அமுலுக்கு வருகிறது. அது 2009 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த எவருக்கும் சிகரெட்டுகளை விற்கலாகாது என்கிறது. டிசம்பர் 13 ம் திகதி அது நாட்டின் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு பக்கத்தில் சட்டங்கள் மூலம் புகைத்தலை நிறுத்த நடவடிக்கைகள் எடுத்துவரும் நியூசிலாந்து புகைத்தல் பொருட்களை விற்கும் கடைகளையும் பெருமளவில் குறைக்கவிருக்கிறது. புகைக்கும் பொருட்களை விற்கும் 6,000 கடைகள் 600 ஆகக் குறைக்கப்படவிருக்கின்றன. சிகரட்டுகளில் இருக்கும் நிகோடின் அளவும் கணிசமாகக் குறைக்கப்படும். புகைத்தல் மீதான வரியும் நியூசிலாந்தில் மிகவும் அதிகமானது.
“இனிமேல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வார்கள். பல வகையான புற்றுநோய்கள், மாரடைப்புகள், பக்கவாதம் மற்றும் உடல் உறுப்புகள் இழப்பு போன்ற புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்ற நிலையில் மக்கள் ஆரோக்கிய சேவைக்கு சுமார் 5 பில்லியன் டொலர்கள் மிச்சமாகும்,” என்று பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் அமைச்சர் ஆயேசா வரால் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்