அமைதிவிரும்பிகளான ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை இரண்டு மடங்காக்க முடிவெடுத்தது.
இரண்டாம் உலகமகாயுத்தத்தின் ஒரு முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஜப்பான் அதில் படுதோல்வியடைந்தது. அதுவரை போர்கள், ஆயுதங்களில் பெருமளவு செலவிட்ட ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதன் பின்பு முன்னரைப் போன்று பெருமளவில் ஆயுதங்களையும், படைகளையும் குறைப்பதில்லை என்று உறுதியளித்தது. அதன் பின்பு முதல் தடவையாக நாட்டின் பாதுகாப்புச் செலவை இரட்டையாக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புச்செலவுக்கான முதலீடு 320 பில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷிடா அறிவித்தார். இதுவரை நாட்டின் வருடாந்தரப் பொருளாதார உற்பத்தியின் ஒரு விகிதமாக இருந்த அந்தச் செலவு இவ்வருடமுதல் இரண்டு விகிதமாக உயர்த்தப்படுகிறது. நாட்டின் பொதுச் செலவுகளில் 10 % பாதுகாப்பு அமைச்சுக்கான செலவாக இருக்கும். தொடர்ந்து வரும் ஐந்து வருடங்களுக்கு மேற்கண்ட முதலீடுகள் நாட்டின் பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் என்றும் கிஷிடா தெரிவித்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாடுகளின் பாதுகாப்பையும் பற்றிய சிந்தனையை மாற்றியிருப்பதாகக் கிஷிடா சுட்டிக் காட்டினார். ரஷ்யாவின் மாதிரிகையைப் பின்பற்றி சீனா, வட கொரியா ஆகிய நாடுகளும் தமது பக்கத்து நாடுகளையும், பிராந்தியத்தையும் மிரட்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்கிறார் அவர்.
ஜப்பான் முதலீடு செய்யவிருக்கும் ஆயுதங்களின் முதன்மையான இடம் நீண்ட தூரத்துக்கு ஏவக்கூடிய ஏவுகணைக் குண்டுகளாக இருக்கும். மேலும் நாட்டின் கடற்படையும் நவீனரக ஆயுதங்களால் பலப்படுத்தப்படும்.
சாள்ஸ் ஜெ.போமன்