பொலீஸ் நிலையத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைப் பணயக்கைதிகளாக்கி இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள்.
தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாகிஸ்தானின் பொலீஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு நாடுகளின் எல்லைகளை அடுத்திருக்கும் பன்னு என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய எடுத்த ஒரு முயற்சி தோல்வியில் முடிந்திருப்பதாக அப்பகுதியின் ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார்.
தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய இயக்கம் பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமிய அரசை உண்டாக்கப் போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளையாக இருப்பினும் ஆப்கான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசாங்கத்தை வீழ்த்தி அங்கு தமது ஷரியா இஸ்லாம் நாடொன்றை அமைப்பதற்காகப் போராடி வருகிறது.
பொலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தலிபான்கள் தம்மை விசாரணை செய்த உத்தியோகத்தர்களிடமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களைப் பணயக்கைதிகளாக்கியிருக்கிறார்கள். தமக்கு ஆப்கானிஸ்தான் செல்லப் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்துதரும்படி அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அங்கே செல்லும் வழியில், நாடுகளின் எல்லையில் அல்லது ஆப்கானிஸ்தானுக்குள்ளே தான் தமது பணயக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்