செய்த ஊழலின் நாற்றம் காற்றிலிருக்கும்போதே மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் சிரில் ரமபோசா.

டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பமாகியது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம். விரைவில் நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பத்துடன் மாநாட்டில் பங்கெடுக்கிறார் சிரில் ரமபோசா. ஐந்து நாட்கள் தொடரவிருக்கும் கட்சியின் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் அவர் உரை நிகழ்த்தியபோது பங்குபற்றிய பலர் இடையே கூச்சலிட்டு அவர் மீதிருக்கும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

“ரமபோசா வெளியேறு,” என்று ஜனாதிபதியை நோக்கிச் சத்தமிட்டதால் ரம்போசா தனது உரையில் சொன்னவை சில நிமிடங்கள் எவருக்கும் கேட்கவில்லை என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. உரையைத் தடைசெய்து சத்தமிட்டதை ரமபோசாவுக்கு எதிரான அரசியல்வாதிகளும் கண்டித்திருக்கிறார்கள்.

ரமபோசா தனது பண்ணையில் ஒளித்து வைத்திருந்த கள்ளப் பணம் பற்றிய விபரங்கள் வெளிவராதிருக்க ஒரு கடத்தல் நடவடிக்கைக்குக் காரணமாக இருந்தாரா என்ற கேள்வி. வெளியாகிய விபரங்களை விசாரித்த பாராளுமன்ற ஆராய்வுக் குழுவொன்று ஜனாதிபதி தீவிரமான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தனது முடிவைக் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

அவரை அதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. ஆனாலு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் கை பாராளுமன்றத்தினுள் பலமாக இருப்பதால் அது நிறைவேறவில்லை. கட்சிக்குள்ளும் ரமபோசாவுக்குப் பலமான ஆதரவு இருப்பதையே கட்சித் தலைமைக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைமை பதவியை வெல்பவரே நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராவார். அந்த இடத்துக்காக ரமபோசாவுக்கு எதிராக Zweli Mkhizes போட்டியிட்டார். 2, 476 வாக்குகளை ரமபோசா ஆதரவாகப் பெற்றார். எதிர் வேட்பாளரால் 1,897 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எனவே அடுத்த தேர்தலிலும் சிரில் ரம்போசாவே ஜனாதிபதி வேட்பாளராவார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *