பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் III இன் முகம் பதித்த நாணய நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைந்த பின்னர் அவரது இடத்தை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார் பட்டத்து இளவரசன் சார்ள்ஸ் III. அரசருக்கான கடமைகளைத் தனது தாயார் மறைந்த உடனேயே ஏற்றுக்கொண்ட அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக முடிசூடிக்கொள்ளவில்லை. மே 06, 2023 ம் திகதியன்று முடிசூட்டும் விழா நடக்கும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மகாராணியின் மறைவுக்கான துக்ககாலம் முடிவடைதல், முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளுக்காகத் தயாராகுதல் ஆகியவை முடிந்த பின்னரே அந்த விழா நடாத்தப்படும்.
சார்ள்ஸ் III பிரிட்டிஷ் அரசராக நாட்டின் பண நோட்டுகளிலிருக்கும் முகமும் அவருடையதாக இருக்கும். அப்படியான நோட்டுக்கள் 2024 நடுப்பகுதியில் புழக்கத்துக்கு வரும். அவை எப்படியிருக்கும் என்பதை பாங்க் ஒவ் இங்க்லண்ட் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய அரசரின் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்தவுடன் மகாராணியின் படங்களைக் கொண்ட நோட்டுக்கல் வாபஸ் வாங்கப்படமாட்டா. அவை மோசமாகி அழியும் நிலைமை வரும்போதே அவை பாவனையிலிருந்து நீக்கப்படும்.
£5, £10, £20, £50 ஆகிய பெறுமதியிலான நோட்டுக்கள் அரசரின் முகத்துடன் தயாரிக்கப்படுகின்றன. மற்றப்படி அவைகளில் தற்போது இருக்கும் அமைப்பே தொடரும். மகாராணி எலிசபெத்தின் முகத்தைக் கொண்ட வங்கி நோட்டுக்கள் 1960 இல் புழக்கத்துக்கு விடப்பட்டன.
அரசரின் முகம் கொண்ட பிரிட்டிஷ் 50p நாணயங்கள் இம்மாத ஆரம்பத்தில் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்