‘மனிதாபிமான அமைப்புகளிலும் பெண்கள் பணியாற்றக்கூடாது’, என்று உத்தரவிட்டார்கள் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உயர்கல்வியைத் தடைசெய்துவிட்ட தலிபான்கள் ஒரே வாரத்துக்குள் மேலுமொரு கட்டுப்பாட்டைப் பெண்கள் மீது அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் செயற்படும் மனிதாபிமான இயக்கங்களின் சேவைகளில் பெண்கள் பங்குபெறலாகாது என்பதே அதுவாகும். அந்த நாட்டில் அப்படியான சேவைகளில் பெரும்பாலானவைகளில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா-வின் அமைப்புக்களுக்கும் அந்தச் சட்டமே நடைமுறைப்படுத்தப்படுமா என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானின் நிதியமைச்சிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் கட்டுப்பாடு பற்றிய விபரங்களே, “உள்நாட்டு வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்கள் எவற்றிலும் பெண்கள் பணியில் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது,” என்று குறிப்பிட்டிருக்கிறது. அதன் காரணம் அப்பெண்கள் ஆப்கானிஸ்தான் பண்பாட்டு விதிகளுக்கு ஏற்ப உடைகளை அணிந்திருப்பதில்லை, நடப்பதில்லை என்பதாகும்.
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாகத் தலிபான்களை உலக நாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நாட்டின் பசி, பட்டிணி ஆகியவற்றுக்கு உதவ, மருத்துவ, சுகாதார சேவைகளில் உதவ மனிதாபிமான அமைப்புக்களின் சேவையே பெரிதும் உதவுகிறது. அவைகளில் பல பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
சமீப காலத்தில் ஆப்கானிஸ்தானில் பெண்களைப் பொது வாழ்க்கையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் பல நடந்து வருகின்றன. அரசியலில் ஈடுபடும் பெண்கள் மீது கல்லெறிந்து கொலைகள் நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பொது இடங்களில் கசையடிகள், கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்படுவது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்